68
சடுகுடு ஆட்டம்
மீறினால், அந்த இடத்திலிருந்து தான் தப்பித்து வெளிவரவும் முடியும்.
இதற்கு கால் திறன் (Foot Work) மிகவும் முக்கியமாக ஒத்துழைக்க வேண்டும். கையை முழுவதும் நன்றாக விறைப்பாக, முன் குனிந்து எவ்வளவு துரம் நீட்ட முடியுமோ அவ்வளவு தூரம் நீட்டும்பொழுது, உடல் முன்புறமாக சற்று சாய்ந்திட நேரிடுகின்றது. அப்பொழுது உடல் சமநிலையை இழந்திடும் நிலையை அடைகின்றது. ஆகவே, கால் இயக்கும் திறனையும் நன்கு கற்றுக் கொண்டவர்களே, உடல் சமநிலை இழக்காமல் கைநீட்டித் தொட முடியும்.
அதற்கும் ஒரு வழி இருக்கிறது. உதாரணமாக, வலது கையை நீட்டித் தொட முயற்சிக்கும்பொழுது, வலது கால் முன்னே நீட்டப்பட்டு, உடல் எடை முழுவதும் வலது காலில் இருப்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல் இடது கையை நீட்டுகின்றபொழுது, இடது கால் முன்னே வர வேண்டும். இரண்டு கைகளையும் முன்புறமாக நீட்டினால், இரண்டு கால்களும் சமமாக இடைவெளி விட்டு உடல் சற்று முன் தள்ளி சாய்ந்திருப்பது போல் வைத்துக்கொள்ளும் பொழுது தான், உடல் சமநிலை இழக்காமல் இருந்து, திறமையை சரிவரப் பயன்படுத்த உதவும்.
எப்பொழுதும் பாடிச் செல்பவர், தனது கைகளை முழு அளவு நீளம் நீட்டுவதுபோல் நீட்டியே பாடிட வேண்டும். அப்பொழுதும், கைகளை ஒரே தன்மையில் நிறுத்தி வைத்திருக்காமல், கைகளை மேலும் கீழுமாகவோ அல்லது பக்கவாட்டிலோ கொண்டு சென்று, எதிரிகளுக்குப் பிடி கொடுக்காமல் விரைவாக அங்குமிங்கும் அசைந்தவண்ணம் இருக்க வேண்டும்.