டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
11
விளையாட்டுக்களின் தோற்றத்தைப் பற்றியும், விளையாட்டுக்களைப் பற்றிய விளக்கங்கள் தருகின்ற பொழுதும், உலகெங்கிலும் ஒரே ஒரு கருத்து மட்டும் தெளிவாக விளக்கப்படுகின்றது. “விளையாட்டுக்கள் எல்லாம் குழந்தைகளை எதிர்கால வாழ்க்கைக்குத் தயார் செய்கின்ற வண்ணத்திலேதான் அமைந்திருக்கின்றன” என்பதுதான் அந்தப் பொதுக் கருத்தாகும்.
ஆயத்தப்படுத்திய ஆட்டம்!
இந்தியாவில் பண்டைய சூழ்நிலையில், போர்கள் அடிக்கடி நடைபெற்று வந்த நாட்களில், மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் ஈடுபடும் போர்களில் புகுந்து போரிடத் தயாராக இருக்க வேண்டிய கட்டாயம் இருந்து வந்ததால், எல்லோரும் தங்களைத் தாங்களே தகுந்த முறையில் தயார் செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலையில் வாழ்ந்தனர். அதற்காக, சிறுவர்களை இளம் வயதிலேயே பழக்கிவிடவும் வேண்டியிருந்தது. இத்தகைய போராட்ட வாழ்க்கைக்குத் தளம் அமைப்பது போல, சடுகுடு ஆட்டம் அந்நாளில் உதவியிருக்கிறது என்பாரும் உண்டு.
எதிரிகள் இடையே புகுந்து, அவர்களது அணியை அதிரடித்துவிட்டு வெற்றியுடன் திரும்பி வருவதுதானே போரிடும் முறை. இந்த வீரச் செய்கைக்கு விளை நிலமாகத்தான் சடுகுடு ஆட்டம் அமைந்திருக்கிறது.