30
சடுகுடு ஆட்டம்
இந்திய தேசிய விளையாட்டாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் கபாடி ஆட்டத்தில், மேலும் பல விதிகளில் மாற்றம் செய்து மென்மையைப் புகுத்தி, பல நுண்திறன்களை (Techniques) வளர்த்துத் தந்தால், பிற நாட்டினர் இந்த ஆட்டத்தை எழிலாகவும் எளிதாகவும் ஆட வழி பிறக்கும் என்பதை உணர்ந்துகொண்ட நமது நாட்டினர், ஒலிம்பிக் பந்தயங்களுள் ஒன்றாக இணைக்கும் இமாலய முயற்சியையும் மேற்கொண்டிருக்கின்றனர்.
காலம் ஒரு நாள் மாறும். நமது முயற்சியும் நிறைவேறும் என்று நம்புவோமாக!
உடலுக்கு ஆரோக்கியத்தையும், அளவிலா பலத்தையும், உடல் உறுப்புக்களுக்கிடையே ஒருங்கிணைந்து செயலாற்றும் ஆற்றலையும், சகோதரத்துவ, சமத்துவக் கருத்துக்களையும் வளர்த்துவிடும் விளைநிலமாகவும் விளங்குகின்ற கபாடி ஆட்டம், இந்திய நாட்டின் பண்பாடான ‘எளிய சிந்தனை உயர்ந்த வாழ்க்கை’ எனும் இலட்சியத்திற்கு உயிரூட்டும் நீரோட்டமாக விளங்குகிறது என்றால் மிகையாகாது.
யாரும் ஆடலாம், எல்லோரும் பங்கு கொள்ளலாம் என்ற அளவில் எளிய, இனிய, உயர்ந்த, ஒப்பற்ற ஆட்டமாக விளங்கும் கபாடி ஆட்டத்தை, எவ்வளவு பழகினால், எப்படிப் பயன்படுத்திக் கொண்டால், சிறப்பினையும் செழிப்பினையும் பெறலாம் என்பனவற்றை இனி வரும் பகுதிகளில் காண்போம்!