110
சடுகுடு ஆட்டம்
போடுகின்ற கோடுகளின் குறியீடுகள் பளிச்சென்று தெரிவதுபோல் அமைந்திருக்கும் புல் (உயரத்தை) தரையாக வைத்திருக்க வேண்டும். அந்தப் புல் தரையும் வழுக்கி விடாத தன்மையுள்ளதாக, மென்மையானதாகவும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
புல் தரையுள்ள ஆடுகளங்களை வைத்திருப்பவர்கள், தொடர் போட்டி ஆட்டம் நடத்துகின்ற பொறுப்பேற்று விடுகின்ற நேரங்களில், குறைந்தது இரண்டு ஆடுகளங்களாவது வைத்திருக்க வேண்டும். முதல் நாள் போட்டியில் புல்தரை தகர்க்கப்பட்டு, தரை தெரிய நேரிடும் என்பதால், ஆடுவதற்கு அபாயமாக அமையலாம். அதனால் இன்னொரு ஆடுகளம் இருந்தால், மாற்றி மாற்றி ஆடவும், ஒன்றைப் பயன்படுத்தும்பொழுது மற்றொன்றைச் சரிபார்த்துத் தயார் செய்து கொள்ளவும் முடியும்.
ஆக, ஆடுகளமானது புல்தரையுடன் இருந்தாலும் சரி, மென்தரையுடன் விளங்கினாலும் சரி, ஆடுவதற்கு ஏற்றவாறு, அபாயம் விளைவிக்காதவாறுள்ள தன்மையில் அமைந்திடல் வேண்டும் என்ற குறிக்கோளுடன் அமைத்திட வேண்டும்.
ஆட்டக்காரர்களுக்குப் பாதுகாப்பு
ஆட்டக்காரர்களுடன் ஆட்டக்காரர்கள் மோதுகின்ற ஆட்டம், அதுவும் அடிக்கடி வலிமை காட்டிமோதுகின்ற ஆட்டம் என்பதை அனைவரும் அறிந்ததே. ‘அறிந்து கொண்டே அபாயத்தில் குதிப்பது’ என்பது விளக்கைப் பிடித்துக்கொண்டே கிணற்றில் விழுபவன் கதை போல்தான் முடியும்.