உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

சடுகுடு ஆட்டம்


யார் அதிகம் நேரம் மூச்சு விடாமல் ‘கபாடி கபாடி’ என்று பாடிக் கொண்டிருக்கிறார் என்று பந்தயம் வைத்துப் பரிசோதித்தல், அதிக நேரம் பாடிக் கொண்டிருப்பவரே இறுதியில் வென்றவராவார் என்று சோதித்துத் தேர்ந்தெடுத்தல்.

4. தொடரோட்டம் போல (Relay Race) நான்கு நான்கு பேர்களாக ஆட்டக்காரர்களைப் பிரித்து நிறுத்தி கையில் குறுந்தடிக்குப் (Baton) பதிலாக, கபாடி கபாடி என்று பாடிக் கொண்டே ஓடச் செய்து பழகுதல்.

இறுதிவரை ஒரே மூச்சில் பாடிக் கொண்டே போவதுதான் பயிற்சி முறை என்பதால், பழகும் ஆட்டக்காரர்கள் ஏமாற்ற முயலாமல் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

5. ஓரிடத்தில் பத்து கட்டைகள் அல்லது ஏதாவது பொருட்களை முதலில் வைத்துவிட்டு, பத்தடிக்கு அப்பால் சிறு வட்டம் ஒன்றைப் போடச் செய்ய வேண்டும். பின்னர் பாடத் தொடங்கும் ஓர் ஓட்டக்காரர் பாடிக் கொண்டே ஒவ்வொரு கட்டை அல்லது பொருளாக எடுத்துக் கொண்டு போய் வட்டத்தில் வைத்துவிட்டு திரும்பி வர வேண்டும். அவர் பாட்டை முடிப்பதற்குள் எத்தனை கட்டைகள் அல்லது பொருட்களை எடுத்துப் போய் வைக்கிறார் என்கிற முறையில் அதிகப்படுத்திப் பழகிக் கொள்ளலாம்.

6. எல்லா ஆட்டக்காரர்களையும் கிழித்திருக்கும் ஒரு கோட்டின் மீது நிறுத்தி வைத்துவிட்டு, ஓடுங்கள் என்று கூறியவுடன், குறித்திருக்கும் முன்னால் உள்ள ஓர் எல்லைக்கு பாடிக்கொண்டே ஓடி, பிறகு முதலில் ஓடத் தொடங்கிய கோட்டிற்கு யார் மீண்டும் வருகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.