காலத்தால் பழமையும், தான் கொண்ட கோலத்தால் இளமையும் கொண்டு விளங்குவது விளையாட்டாகும்.
மனித இனத்துடனே பிறந்து, மனித இனத்துடனே வளர்ந்து, மனித இனத்தையே தொடர்ந்து துணையாகவும், துன்பத்திற்கு அணையாகவும் இருந்து, இன்ப உலகின் ஏற்றுமிகு விடிவெள்ளியாய் திகழ்கின்றது. விளையாட்டே யாகும்.
அருமையான உடல் வளத்திற்கும், திறமையான மன நலத்திற்கும் இனிய வாய்ப்பளித்து, வழியமைத்து விளை யாட்டுக்கள் பணியாற்றுகின்றன.
அக்கால மக்கள் விளையாட்டுக்களை நம்பினர். ஆர்வமுடன் விளையாண்டனர். ஆனந்தமான வாழ்க்கையில் இந்த உலகைக் கண்டனர். அனுபவித்தனர்.
காலம் மாறிக்கொண்டே வந்தது மக்கள் உடலை மறக்கத் தொடங்கினர். உடையும், உணவும், உல்லாச உணர்வும் உள்ளத்தை வளைத்துக் கொண்டன. சோம்பல் சிம்மாசனம் ஏறி சிருங்கார ரசத்துடன் ஆளத் தொடங்கியது.
விளையாட்டுக்கள் மனித இனத்திலிருந்தே மெது வாக விலகிக் கொள்வது போல, விடைபெற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டன. ஆமாம்! விளையாட்டை விளையாடு வது பாபம்’ என்ற ஒர் நினைவு மக்களிடையே எழத் தொடங்கியது.
'விளையாட்டை விளையாடுவது கேவலம்’ என்ற ஒர் நிலையும் உருவாகத் தொடங்கியது. இறுதியில், விளை யாடாத மனித இனம், நோயிலும் நொந்துபோன நிலையிலும் வதியத் தொடங்கியது.