உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம் நேரு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

45


கொள்ளையடித்து ருசிகண்டிருந்த ஒரு சிலர் மேலும் பணம் சேர்க்கவும் சமுதாயத்தை ஆட்டிவைக்கும் சக்தியை வளர்க்கவும் துடித்தனர். பேராசை வெறி பிடித்த இவர்களால் அமுக்கி நசுக்கப்பட்ட சமூகத்தின் மிகப்பலர் தங்களை அடக்கி ஒடுக்குகிற நாசச்சுமைகள். நீங்க வழி பிறக்காதா, என்று ஏங்கித் தவித்தார்கள். மத்தியதர வர்க்கத்தினரோ அரசியலில் பெரும் மாறுதல் ஏற்பட்டு சுயநிர்ணய உரிமைகள் கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுதந்திரம் கிடைத்தால், தங்கள் வளர்ச்சிக்குச் சாதகமான வழிகள் பல தாமாகவே திறக்கப்பட்டுவிடும் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள், சட்டபூர்வமான கிளர்ச்சிகளும், அரசியல் உரிமைப்போராட்டங்களும் இந்தியா பூராவும் பரவி இருந்தன. ஆகவே நாட்டினர் சுயேச்சை, சுயாட்சி, பிறப்புரிமை என்றெல்லாம் பேசி மகிழ்ந்து வந்தார்கள்.

இந்த மனப்புழுக்கம் சில பிரதேசங்களிலுள்ள விவசாயிகளிடையே முற்றித் தனிப்பட்ட செயல் முறைகளிலே வெடித்தது. பஞ்சாப் மாகாணத்தில் அமுல் நடத்தப்பெற்ற கட்டாய ராணுவஆள் சேர்ப்பு முறை விதைத்திருந்த கசப்பு ஒடுங்காமல் வளர்ந்துகொண்டிருந்தது. பட்டாளத்தில் சேர்க்கப்பட்டு கப்பல்களில் வெளிநாடு சென்று மீண்ட வீரர்கள் இப்போது அதிகாரிகளின் ஆக்கினைக்குத் தகுந்தாற்டோல் ஆடும் பாவைகளாக விளங்கவில்லை. அவர்கள் மனப்பண்பு பெரிதும் வளர்ச்சியுற்று விட்டது. அதனால் அவர்களிடையே அதிருப்தியும் வளர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/48&oldid=1366998" இலிருந்து மீள்விக்கப்பட்டது