உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18


19. ஆரம்ப நிலை உதை (Kick- off)

எதிரெதிர்க் குழுவைச் சேர்ந்த ஆட்டக்காரர்கள் தங்களுடைய பகுதியிலே, தங்களுக்குரிய ஆடும் இடங்களிலே (Position) நின்று கொண்டிருக்க, பந்தை உதைக்கும் வாய்ப்பு பெற்றக் குழுவில் உள்ள இருவர், மைய வட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் பந்தின் அருகில் நிற்க, நடுவரின் விசில் ஒலி சைகைக்குப் பிறகு, அந்தப் பந்தை உதைத்தாடும் முறைக்குத்தான் ஆரம்ப நிலை உதை என்று பெயர்.

ஆட்டத்தின் தொடக்கத்திலும்; ஒவ்வொரு முறையும் விதியின்படி பந்து இலக்கினுள் உதைக்கப்பட்டு வெற்றி எண்ணாக (Goal) மாறிய பின்னும்; முதல் பகுதி நேரம் முடிந்த பிறகு இடைவேளைக்குப் பிறகு ஆரம்பமாகும். இரண்டாவது பகுதியின் தொடக்கத்திலும்; சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு, மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கவும், இந்த ஆரம்ப நிலை உதை பயன்படுகிறது.

20. மறைமுகத் தனியுதை (Indirect Free-kick)

எதிராட்டக்காரர்கள் இழைக்கின்ற தவறுகளுக்கு எதிராக, தவறுக்குள்ளான குழுவினருக்கு நடுவரால் வழங்கப் படுவது மறைமுகத் தனியுதை என்னும் வாய்ப்பாகும்.

இவ்வாறு உதைக்கின்ற மறைமுகத் தனி உதை என்னும் வாய்ப்பினால், பந்தை நேரே இலக்கினுள் செலுத்தி வெற்றி எண் Goal பெற முடியாது. ஆனால், பந்து இலக்கினுள் நுழையுமுன்னர் வேறொரு ஆட்டக்காரர் அப்பந்தைக் காலால் தொட்டோ அல்லது விளையாடியோ இருக்க வேண்டும்.