பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

இரத்தச் சோகை

இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மலேரியா, கல்லீரல் அழற்சி நோய், கிரந்தி, எய்ட்ஸ் போன்ற நோய்கள் அறவே இருக்கக் கூடாது. இரத்தம் கொடுப்பவரின் உடல் எடை குறைந்தது 45 கிலோ கிராம் அளவில் இருக்கவேண்டும்.

இரத்தம் வகைப்படுத்தல் என்பது இந்நிலையத்தின் இன்றியமையாப் பணியாகும். இதற்காக இரத்தம் வழங்குபவரின் விரலில் ஊசி முனையால் குத்தி இரத்தம் வரவழைப்பர். ஒரு சொட்டை சிறிய கண்ணாடி வில்லையின் பரப்பில் படுமாறு ஒற்றி எடுப்பர். பின் அதனை மற்றொரு கண்ணாடி வில்லைப் பரப்பில் அழுத்தி நிரவுவர். அத்துடன் சில சொட்டுகளை குழாய் மூலம் உறிஞ்சி எடுத்து சிறு கண்ணாடிப் புட்டியில் வைத்துப் பின் இரண்டையும் தொலைநோக்காடி மூலம் ஆய்ந்து நோயின் வகைகளைக் கண்டறிவர்.

இரத்தம் வழங்குபவரை கையை நீட்டியவாறு படுக்கவைப்பர். நடுக் கையில் சிரை இருக்குமிடத்திற்கருகில் உணர்விழப்பு மருந்தைச் செலுத்தி பின் சிரையினுள் இரத்தப் போக்கு ஏற்படுத்தும் ஊசியைச் செலுத்துவர். நோய்க்கிருமிகள் அகற்றப்பட்ட புட்டியில் இரத்த உறைவைத் தடுக்கும் டை சோடியம் சிட்ரேட் உப்புக் கரைசல் இட்டு இரத்தத்தைச் சேமிப்பர். சுமார் 420 மி.லி இரத்தம் புட்டியினுள் சேர்ந்தவுடன் சிரையினுள் செலுத்தப்பட்ட ஊசியை எடுத்துவிடுவர். நோய்க்கிருமி அகற்றப்பட்ட பஞ்சை ஊசி குத்திய இடத்தில் வைத்து மூன்று நிமிடங்கள் பஞ்சை அழுத்திப் பிடித்தால் இரத்தக்கசிவு நின்றுவிடும். பின்னர் புட்டியின் மேல் இரத்த வகை, இரத்தம் சேமிக்கப்பட்ட நாள் ஆகியவற்றைக் குறிப்பிடுவர். இரத்தத்தைக் கண்ணாடி புட்டியிலோ பிளாஸ்டிக் பையிலோ சேமிக்கலாம்,

இரத்த சேமிப்பிற்கான விதிமுறைகளைக் கண்டிப்புடன் கடைப்பிடித்து குளிர்சாதன அறைகளில் வைத்துக் காப்பர். இவ்வாறு இரத்த சேமிப்பு நிலையத்தில் உள்ள இரத்தத்தை யாருக்கேனும் அவசரம் நிமித்தம் மாற்றீடாகச் செலுத்த வேண்டுமெனில் இரத்த செல்கள், தட்டயம்கள் (Platalets), பிளாஸ்மா ஆகியவற்றின் ஒப்புமையை அறிந்து உரியவர்க்குச் செலுத்தவேண்டும். ஒருமுறை சேமிக்கப்பட்ட இரத்தத்தை மூன்று வார காலத்திற்குள் பயன்படுத்திவிடவேண்டும் இரத்தத்தின் உரை பொருள்கள் சிறிதுகாலத்திற்குள் கெடக் கூடியவையாக இருப்பதால் சேமிக்கப்படும் இரத்தத்தை உடனடியாக மாற்றீடாகப் பயன் படுத்துவதே சாலச் சிறந்தது.

இரத்தச் சோகை : உடலில் உள்ள இரத்தத்தில் போதிய அளவு (14.4%) ஹிமோகுளோபின் இருக்கவேண்டும். இது ஆண்கள்-பெண்கள், குழந்தைகளின் இரத்தத்தில் வெவ்வேறு அளவுகளில் அமைந்திருக்கும். அந்த அளவில் குறைவு ஏற்பட்டால் அதை ‘இரத்த சோகை' என்று அழைப்பார்கள்.

உடலில் ஏற்படும் இரத்தக் கசிவினாலும் இரத்த அணுக்களின் உற்பத்தித் தலமான எலும்பிலுள்ள மஜ்ஜையில் அணுக்களின் உற்பத்தி குறைவதாலும் அதிக அளவில் சிவப்பணுக்கள் அழிவதாலும் இரத்தத்தில் இரும்புச் சத்து குறைவாக இருந்தாலும் இந்நோய் உண்டாகும். உடலிலிருந்து அரை லிட்டர் இரத்தம்வரை கசிந்தால் பெரும் தீங்கு ஏதும் ஏற்படுவதில்லை. ஆனால், அதுவே அதிகமானால் தோல், தசைப் பகுதிகள் போதிய இரத்தவோட்டம் பெற இயலாமல் போகிறது. இதனால் மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற உடலின் இன்றியமையா உறுப்புகள் பாதிப் க்காளாகின்றன.

இரத்தச் சோகை நோயுற்றவரின் உடல் வெளிறித் தோன்றும். உடலில் அதிக வியர்வை தோன்றும். இதனால் உடல் அதிகக் குளிர்ச்சியுடையதாக இருக்கும். பொருத்தமான இரத்தத்தை சிரை வழியாக உடலுள் செலுத்துவதன் மூலம் இரத்தச்சோகைநோயை போக்கலாம்.

'இரும்புக் குறை சோகை நோய்' சோகை நோய்களிலேயே மிக அதிகமாக ஏற்படுவதாகும். இந்நோய் கண்டவர்கள் உணவில் அதிக அளவு இரும்புச் சத்து இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். இரும்புச்சத்துக் கொண்ட மாத்திரை, டானிக் போன்றவைகளையும் உரிய அளவில் உட்கொண்டு நிவாரணம் பெறலாம். பால், முட்டை பேரீச்சம் பழம், ஈரல், காய்கறிகள், அகத்திக் கீரை, முருங்கைக்கீரை, அரைக்கீரை போன்ற கீரை வகைகளை உண்ண வேண்டும்.

இரத்தச் சோகை உள்ளவர்கள் எப்போதும் சோர்ந்து காணப்படுவர்.அதிகமாக மூச்சிரைப்பும் படபடப்பும் இருக்கும். எதிலும் ஆர்வமின்றி இருப்பர். பசி இருக்காது. பார்வையும்