6
அவள் உற்சாகமாகத் தான் பேசினாள். ஆனால் தோழிகளுக்கு சுவை குன்றி விட்டது. முதலில் சும்மா வம்பளப்பாகத் தொடங்கினார்கள். பத்மா இட்சிய விளக்கப் பிரசங்கத்தில் இறங்கவும், இவள் லெக்சரடிக்க ஆரம்பித்தால், லேசிலா முடிவு காண்பாள்' என்று பட்டது.பொழுது போக்குப் பேச்சை தொணதொணப்பாக்கிக் கொள்வதை எப்படி சகிக்க முடியும்?.
'அந்த லட்சியக் காதல்-பிளட்டானிக் லவ்-எல்லாம் பேச்சுக்கும் கனவு காணவும் தான் லாயக்கு. நடைமுறையில் படுதோல்விதான் அடையும்' என்று தேவகி கூறினாள். 'நீ தான் இப்போ இவ்விதம் பேசுகிறாய். எப்பவும் இதே மாதிரியா இருந்துவிடப் பேசறே? பார்க்கலாமே!'
அதற்குத்தான் பத்மா சொன்னாள் என்னிடம் அதெல்லாம் நடக்காது’ என்று.
பேச்சை நிறுத்துவதற்கு சுலபமானவழி கண்டுபிடித்தாள் குறும்புக்காரி புஷ்பா. வளைகள் கலகலக்கும் தன் கரங்களை மாலை போல் பத்மாவின் கழுத்தில் கோர்த்து, அருகணைந்து, இவ்வளவு அழகும் வீணாகவா போகணும்? கவிகள் சொல்வதுபோல இளம்பிறை நெற்றி, வில்புருவம், கருவண்டுக் கண்கள், சம்பங்கிப்பூ மூக்கு, ரோஜா உதடுகள், மாம்பழக் கன்னங்கள்...த்ஸொ த்ஸொ!..இவ்வளவும் பாழாகவா பயனற்றா போகணும் என்கிறாய் பத்மு? அடி என் பத்மு' என்று கொஞ்சிக் கேலிசெய்தாள்.
பத்மாவுக்கோ எரிச்சல், அவள் ஆத்திரத்தை அதிகமாக்கியது ஜானகியின் பேச்சு.'கவலைப்படாதே புஷ்பா!அவளே தானாக காயுதே...பாலு போல நிலவு வீணாகக் காயுதே என்று பாடிப் பெருமூச் செறிந்து ஜோடி தேட ஆரம்பித்துவிடுவாள்....