46 வல்லிக்கண்ணன் கதைகள்
ஊரில் அம்மன் கோயில் கொடை நடக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது புதுசாக ஒரு நாடகம் நடிக்க வேண்டும் என்று சிங்காரவேலுவும் நண்பர்களும் உற்சாகமாகப் பேசிப் பொழுது போக்கினார்கள். கதை எப்படி எப்படி இருக்க வேண்டும், யார் யாருக்கு என்னென்ன வேடம தருவது என்றெல்லாம் சர்ச்சித்து மகிழ்ந்தார்கள்.
அப்படிப்பட்ட சமயத்திலேதான் திடீரென்று சிங்காரவேலு காணாமல் போய்விட்டான். ஊரில் பரபரப்பு இராதா பின்னே.
அவன் தனிக்காட்டு ராஜா! அவனை தட்டிக் கேட்கவோ, அடக்கி ஆக்கினைகள் செய்யவோ யாரும் கிடையாது. எனவே அவன் எவரிடமும் எதுவும் சொல்ல வேண்டிய தேவையுமில்லை. போய்விட்டான். ஏன் போனான் என்றுதான் பெரியவர்களும், இளைஞர்களும், பையன்களும் குழம்பித் தவித்தார்கள்.
துரத்துக்குடியில் முகாமிட்டிருந்த ஒரு நாடகக் கம்பெனியில் சேரப் போயிருப்பான் என்று சிலர் அபிப்பிராயப்பட்டார்கள். மதுரைக்குப் போயிருக்கலாம் என்று அவன் நண்பர்கள் கருதினார்கள். சினிமாவில் சான்ஸ் தேடி மெட்ராசுக்கே போயிருப்பான் என்று சொன்னவர்களும் இருந்தார்கள்.
இப்படியாகப் பேச்சு வளர்ந்தது. நாட்கள் ஓடின. போனவன் போனவன் தான். அவனைப் பற்றிய தகவல் எதுவும் தெரியவே இல்லை. -
காலம் ஒடஒட அவன் போய்விட்ட விஷயமும் ஆறிய பழங்கஞ்சி ஆகியது. ஒதுக்கப்பட்டும் விட்டது. சிவராத்திரி, கோயில் திருவிழா, அம்மன் கொடை போன்ற விசேஷ சமயங்களில் யாராவது நினைவுகூர்வது உண்டு.
'சிங்காரவேலு இருந்தான்னா நல்ல நாடகமா ஏதாவது நடத்துவான்... போயிட்டானே பாவிப்பய... எங்கே இருக்கான்னே தெரியலியே. இப்படியா நம்ம மறந்துபோவான்?'
ஊர்க்காரர்கள் மனப்பூர்வமாக அவனை நினைக்கத்தான் செய்தார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் அவனைப் பற்றிய பூர்வ நினைவு எதையாவது ரசமாகச் சொல்லுவார்.
‘எங்கே இருந்தாலும் சரி, நல்லாயிருக்கட்டும்' என்பார் ஒருவர்.
'பய கெட்டிக்காரன். ஏதாவது வழி பண்ணி, தான் நினைத்ததை முடிச்சு முன்னுக்கு வந்திருப்பான். நமக்குத்தான் அவனைப் பற்றிய சமாச்சாரம் எதுவும் தெரியலே' என்று ஒருசமயம் பெரியவர் ஒருவர் குறிப்பிட்டார்.