உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளூர் ஹீரோ 33

அவர்கள் மனசில் விதம் விதமான எதிர்பார்ப்புகள். படத்தின் ஹீரோ அவராக இருப்பார் என்று எண்ணியவர்களுக்கு முதலிலேயே ஏமாற்றம் கிட்டிவிட்டது. புகழ் பெற்ற ஸ்டார் நடிகர் ஒருவரின் பெயர் எடுப்பாக போஸ்டர்களில் காணப்பட்டது. இருந்தாலும், நம்ம பண்ணையார் துணை ஹீரோவாக வரக்கூடாதா என்று அவர்கள் நினைத்தார்கள்.

யார் யாரோ ஜோடியுடன் அவர் ஜோராக ஆக்ட் பண்ணியிருப்பார் என்று அநேகர் எதிர்பார்த்தார்கள்.

படம் ஆரம்பித்து ஓடியது. ஒடிக்கொண்டே இருந்தது.

'என்ன நம்ம ஆளை இன்னும் காணோம்' என்று பரபரத்தது ரசிகர்களின் மனம்.

இடைவேளை வந்தது.

'இதுவரை சின்னப் பண்ணையார் தலை காட்டவேயில்லையே! அவர் நடிச்ச பாகம் படத்திலே இருக்குதோ இல்லையோ!' என்று முணுமுணுத்தார்கள் சில சந்தேகப் பிச்சுகள்.

அவர்கள் அவசரப்பட்டுவிட்டார்கள்! -

இடைவேளைக்குப் பிறகு படம் விறுவிறுப்பாக வளர்ந்தது. ஹீரோ நடிகர் பல வேலைத்தனங்கள் பண்ணிக்கொண்டிருந்தார்.

ஒரு கூட்டம். ஹீரோவை தாக்குவதற்காக நாலைந்து பேர் ஒடி வருகிறார்கள். ஹீரோ கால்களாலும் கைகளாலும் அவர்களுக்கு செம்தியாகக் கொடுக்கிறார். அப்போது 'விடாதே, பிடி, உதை' என்று கூவிக்கொண்டு மூன்று பேர் வருகிறார்கள். ஹீரோவின் ஆட்கள். எதிரிகளோடு மோதுகிறார்கள். குத்துகிறார்கள். எதிரிகளை விரட்டி அடித்து, வெற்றிமிடுக்கோடு ஹீரோவைப் பார்க்கிறார்கள்.

'ஹ்விட்... ஹ்விட்டோ ஹ்வீட்!"

தரை ரசிகர்கள் மத்தியிலிருந்து ஒரு விசில் ஒசை. 'அதோ சின்னப் பண்ணையார் என்றொரு கூவல்.

எல்லோரும் பார்த்து விட்டார்கள் - சிங்காரத்தின் நிழலை. குத்துவீரர் மூவரிலே ஒருவர். எதிரியைத் துரத்திவிட்டு வெற்றிச் சிரிப்பு சிரித்து நின்றார்.

படம் ஒடி, காட்சிகள் வளர்ந்தன. ஆனாலும், சிங்காரம் அப்புறம் தென்படவேயில்லை. சப்பென்றாகி விட்டது சிவபுரம் காரர்களுக்கு. -