23 வல்லிக்கண்ணன் கதைகள்
23 ↔ வல்லிக்கண்ணன் கதைகள்
அப்பவே அருமையாக நடிப்பார் என்று சக மாணவர்களும் மற்றும் பலரும் சொல்வது உண்டு.
படிப்பை முடித்துக் கொண்டு சிங்காரம் சின்னப் பண்ணையாராய் வீட்டோடு தங்கிவிட்டபோதும், நடிப்புக் கலையில் அவருக்கு இருந்த மோகம் தணியவில்லை. 'சிவபுரம் ரிக்ரியேஷன் கிளப்' என்று ஒன்றை ஆரம்பித்தார். சீட்டுக்குச்சேரி முக்கிய பொழுதுபோக்கு என்றாலும், அவ்வப்போது பிக்னிக் போவது, எப்பவாவது வேட்டைக்கு என்று சொல்லி காடுகள் மலைகள் பக்கம் திரிவது, டென்னிஸ் விளையாடுவது போன்ற பொழுதுபோக்குகளில் அவரும் அவருடைய நண்பர்களும் ஈடுபட்டார்கள். அனைத்தினும் மேலாக, வருடத்துக்கு இரண்டு மூன்று நாடகங்கள் நடித்து மகிழ்வார்கள்.
எல்லாவற்றுக்கும் மூல காரணம் சின்னப்பண்ணை சிங்காரம் தான். அவர் கதாநாயகனாகத் தோன்றி அட்டகாசமாக நடிப்பார். எந்த வேடம் போடவும் தயங்க மாட்டார். ஆனால், பகட்டாக விளங்க ஆசைப்படுவார். ஏற்றுக் கொண்ட பாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்குமா இராதா என்ற கவலை அவருக்குக் கிடையாது.
'மார்க்கண்டேயர்' நாடகத்தில் சிங்காரம் 'முன் குறத்தி'யாகவும் 'பின் எமன்' ஆகவும் நடிப்பது உண்டு. அதாவது, முதலில் குறத்தி வேடம்; பின்பகுதியில் அவரே எமனாக வருவார். குறத்தியாக வரும்போது, அவர் விலை உயர்ந்த சில்க் புடவை, கையில் அருமையான ரிஸ்ட் வாட்ச், கால்களில் ஸ்டைலான ஸ்லிப்பர்கள் அணிந்து வருவார். எமன் வேடத்தின் போது, தங்க விளிம்புடன் மினுமினுக்கும் 'கூலிங்கிளாஸ்’ அணிந்துகொண்டு காட்சி தருவார்.
பார்க்கிறவர்கள் தங்களுக்குள் குறை கூறிக் கொள்வார்கள். பரிகாசமாகப் பேசுவார்கள். ஆனால் பண்ணையார் முன்னே விமர்சிக்கமாட்டார்கள். 'குறத்தி ஆக்டிலே கொன்னுட்டீங்க போங்க!' 'எமன்! அடா அடா என்ன ஆர்ப்பாட்டம்! எத்தனை மிடுக்கு! அபாரமான நடிப்பு. பிரமாதம் ஐயா பிரமாதம்!' என்ற ரீதியில் புகழ்ந்து தள்ளுவார்கள் அவரிடம்.
'நம்ம பண்ணையார் சரியான வேஷப் பிரியன்’ என்றும் ஊர்காரர்கள் சொல்லிக் கொள்வார்கள்.
அவரும் அப்படித்தான் நடந்து கொண்டார். வாழ்க்கை கூட அவருக்கு நாடகமாகத்தான் தோன்றியதுபோலும். ஒரு ஹீரோவாகத் தன்னை எண்ணிக் கொண்டு அலங்காரத் தோற்றத்தோடு ஊர் சுற்றுவார். விதம்விதமான டிரஸ்கள். கழுத்தணிகள்.