அப்படியே அரசு உத்தியோகம் கிடைக்கும் வாய்ப்பு இருந்திருந்தாலும், புதுமைப்பித்தன் அவ்வேலையை ஏற்றுப் பணி புரிந்திருக்க மாட்டார். அவர் மனம் அடிமை உத்தியோகத்தை வெறுத்தது.
மகன் தாசில்தார் ஆகாவிட்டாலும், ஒரு வக்கீல் ஆகவாவது வர வேண்டும் என்று தந்தை ஆசைப்பட்டார். புதுமைப்பித்தனை சட்டப் படிப்பு படிக்கும்படி தூண்டினார். அதற்கு உதவக்கூடிய வகையில், திருவனந்தபுரத்தில் வசித்த சுப்பிரமணிய பிள்ளை என்பவரின் மகளைப் பெண் பார்த்துப் பேசி முடித்துத் திருமண ஏற்பாடுகளைச் செய்தார்.
1931-ம் வருடம் ஜூலை மாதம் புதுமைப்பித்தன் கமலாம்பாளை திருமணம் செய்து கொண்டார்.
கல்லூரிப் படிப்பையே வெறுத்த புதுமைப்பித்தன் கல்யாணத்துக்குப் பிறகு மீண்டும் கல்லூரியில் சேர்ந்து சட்டப் படிப்பு பயில நாட்டம் கொள்வாரா என்ன! பெரியவர்களின் யோசனைகளையும் ஏற்பர்ட்டையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. தன் மனம் போன போக்கில் வாழலானார். புத்தகங்களைத் தேடிப் படிப்பதும், நண்பர்களோடு இலக்கியம் பேசுவதுமே அவர் மனசுக்குப் பிடித்த விஷயங்களாக அமைந்திருந்தன.
அந்நாட்களில் திருநெல்வேலி ஜங்ஷனில் முத்தையா பிள்ளை என்றொருவர் புத்தக வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அவருடைய புத்தகக் கடை கடைச்சங்கம் என்ற பிரசித்தி பெற்றிருந்து, காரணம், திருநெல்வேலி வட்டாரத்தில் இருந்த எழுத்தாளர்களும் இலக்கிய ரசிகர்களும் நாள்தோறும் அந்தக் கடையில் கூடிப் பேசிப்பும் படித்தும் பொழுது போக்குவது வழக்கம். முத்தையா பிள்ளையும் நல்ல இலக்கிய ரசிகராக இருந்தார். புதுமைப்பித்தனும் இச்சங்கத்தில் கலந்து கொண்டார்.
அவருடைய போக்கு அவர் தந்தைக்குப் பிடிக்கவில்லை. அவர் குறைகூறி மகனைக் கண்டித்தார். உபதேசங்கள் புரிந்தார். சண்டை பிடிக்கவும் தொடங்கினார். அத்துடன் மாற்றாந்தாயின் கசப்பும் வெறுப்பும் புதுமைப்பித்தனுக்கும் அவருடைய மனைவிக்கும் தொல்லைகள் கொடுத்து வந்தன. ஆகவே, வீடு என்பது அமைதியற்ற இடம் ஆகி விட்டது அவருக்கு. -
அவர் சுதந்திரமாக வாழ விரும்பினார். பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டு, எழுத்தாளனாக வளரவேண்டும் என்று ஆசைப்பட்டார். அதே நோக்கமாக அவர் முயற்சிகள் செய்தார். கதைகள் எழுதினார்.