களிப் பொருபது
களிப் பொருபது, பலரால் பாடப்பெற்ற இவ்விலக்கியத்தை மூன்றாம் குலோத்துங்க சோழன் தொகுத்ததாக நம்பப்படுகிறது.
அசரீரி பாடியது
[தொகு]இந்தக் கைக் கோளர் இசைக்கெண் கணன் படைத்த
எந்தக் கைக் கோளர் இணை ஆவாரே - அந்திப்
பிறையணிகைக் கோளனுருப் பெற்றவன்பால் வைகும்
நிறையணிக் கோளரே நேர்.
ஒளவையார் பாடியது
[தொகு]மூவுலகை யுங்கடந்து மூதண்டப் பித்திகையை
மேவிஅதற் கப்பாலும் மின்னியதே - பூவிலென்றும்
மங்காத நூல்வேண்டி மாண்கூத்தற் கிட்டசிரச்
சிங்கா தனத்தலைவர் சீர்.
கம்பர் பாடியது
[தொகு]கந்தழியென்(று) ஆன்றோர்கள் கண்டு நிதம்பரவும்
எந்தை முருகன் இளையவராம் - சந்ததியில்
வந்துமகிழ் செங்குந்தர் வாய்மைதனை என்சொல்கேன்
செந்திருமால் செல்வர்களே தேர்ந்து.
புகழேந்தி பாடியது
[தொகு]விண்முகத்தோர் பூமாரி வீசியதும் ஓர்வியப்போ
மண்முகத்தே செங்குந்தர் மாய்சிரங்கள் - எண்முகத்தும்
சிந்தியதத் தம்முடலைச் சேர்ந்தொட்டிக் கொண்டொலித்து
வந்தவிதம் எண்ணவருங் கால்.
அம்பிகாபதி பாடியது
[தொகு]குந்தர் பெருமிதத்தைக் கூறுவதென் பார்த்திபர்காள்
சந்தத் தமிழ்க்கடலார் தாம்போற்ற - விந்தைத்
தலைதந்தார் பாடலுக்குத தாமென்றும் பூவில்
கலைதந்தார் மக்களுக்குக் காண்.
சோழன் பாடியது
[தொகு]ஏதென் றெடுத்துரைக்கேன் என்னாசான் தன்கவியைப்
போதுள் இருந்துவளர் பொன்மாதே - ஈதலவா
சாகாத கல்வியென்று சான்றோர்கள் சாற்றிவைத்த
ஏகாந்தச் சொல்லாகும் எண்.
பாண்டியன் பாடியது
[தொகு]அன்றும் கவிநலத்தை ஆய்ந்தறிந்தேன் பாண்டியிலே
இன்றும் கவிநலத்தை ஈங்கறிந்தேன் - என்றும்தான்
கூத்தற் கெதிருண்டோ கூறும் அவனிதனில்
பார்த்திபரே காண்மின் படித்து.
சேரன் பாடியது
[தொகு]விண்கண்ட தேவரெலாம் வீற்றிருந்தார் ஈங்கென்று
கண்கண்ட மாமுனிவர் காட்டினார் - பண்கொண்ட
கூத்தன் கவிக்குக் குவிந்தலை ஆசனத்திப்
பார்த்திடவே நன்றாய்ப் பதிந்து.
அஞ்சனாட்சி பாடியது
[தொகு]வாழிசக்ர வர்த்திதன்பேர் வாய்ந்தஒட்டக் கூத்தன்பார்
ஏழினொடும் ஏழுமதன் மேலுநிலை - சூழச்செய்
ஈட்டி எழுபதெனும் இந்நூ ற்கொப் பின்மைகண்டீர்
நட்டிலுயர் வாணர்களே நன்கு.
சைவாசாரியார் பாடியது
[தொகு]வாழிஒட்டக் கூத்தன்! வகைவந்தார் தாம்வாழி!
வாழிமன்னன் எந்நாளும்! வையகத்தில் - வாழி
கொலைகளவு கள்காமம் கோள்விலகி மாக்கள்
உலைவில்லா இன்பத் துகந்து.
களிப் பொருபது முற்றும்.