பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

7


மொழியினையே வேலியாகக் கொண்டது தமிழ்நாடு, அந்நாட்டினரின் உள்ளங்களில் எல்லாம் நிலைபெற்று வீற்றிருந்து, புகழ் மணத்துடன் மதுரை என்றென்றும் விளங்கும். அங்ஙனம் அல்லாது, அதன் சிறப்புக் குறைந்து போதலும் என்றாவது உண்டாகுமோ?” என்பது, இதன் பொருள். இதிலிருந்து, “மதுரை நகரின் பெருமை தமிழ் உள்ளவரையும் தமிழரின் நெஞ்சில் நீங்காது நிறைந்திருக்கும்” என்று நாம் அறிகிறோம். இந்த வாக்கு இன்றும் உண்மையாகவே விளங்குகிறது. அன்று போற்றியதனைப் போலவே, மதுரையின் பெருமையினை, நாமனைவரும் இன்றும் மனம் விரும்பிப் போற்றிவருகின்றோம்.

வையையின் சிறப்பு

‘பொதியமலை உள்ளளவும் மதுரையும் தமிழர் நெஞ்சில் வாழும்’ என்றது முன் செய்யுள். இன்னொரு செய்யுள், ‘வையை நதி உள்ளளவும் வளமதுரையின் சிறப்பு வையகமெல்லாம் குன்றாது நிலவும்’ என்கிறது.

“செல்வத்தின் தெய்வம் திருமகள், வளமையைத் தருபவளும் அவளே யாவாள். அவளின் நெற்றியிலே இட்டுள்ள திலகத்தைப்போல என்றும் சிறப்புடன் விளங்குவது மதுரை. அவளுடைய திலகத்தின் சிறப்பினைப் போன்று, வையத்தே என்றும் சிறப்புற்று விளங்கிப் புகழாற் பொலிவுறுவதும் மதுரையாகும். இங்ஙனம் அல்லாது, மதுரையின் சிறப்புப் பொய்யாகிப் போதலும் உளதாகுமோ? அஃது அப்படி ஆகவே ஆகாது. அழகாக ஒப்பனை செய்யப்பெற்ற தேரினை உடையவன் பாண்டிய மன்னன். அவனுக்குச் சொந்தமான வையை நதி உண்டாகியிருக்கும் காலத்தின் அளவும், மதுரையின் சிறப்பும் மங்கிப்போதல் இல்லை.”

செய்யாட்கு இழைத்த திலகம்போல் சீர்க்கொப்ப
வையம் விளங்கிப் புகழ்பூத்தல் அல்லது
பொய்யாதல் உண்டோ மதுரை புனைதேரான்
வையைஉண் டாகும் அளவு.

இந்தப் பரிபாடற்செய்யுள் போற்றுவதும் இன்று வரை உண்மையாகவே இருக்கிறது. வையை மறையவும் இல்லை; வண்தமிழ் மதுரையின் புகழ் குறையவும் இல்லை.