பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொறுப்பினை ஏற்று 1933 முதல் 1938 வரை மொழிப்புலத் தலைவ ராயமர்ந்து தமிழுக்கு ஆக்கமாகும் பணிகளைச் செய்தார். தமிழ்த் துறையிற் பயிலும் முதுகலை மாணவர்கட்கும் வித்துவான் மாண வர்கட்கும் தொல்காப்பியம், சங்க இலக்கியம், கம்பராமாயணம் முதலிய உயர்ந்த நூல்களைப் பாடஞ்சொல்லியும், மகாவித்துவான் ரா. இராகவையங்கார், பண்டிதமணி கதிரேசச் செட்டியார் பண்டித் ந. மு. வேங்கடசாமி நாட்டார் முதலிய பெரும் புலவர்களை அழைத்துத் தமிழாராய்ச்சித் துறையினைத் தொடங்கி வைத்தும், காய்தலுவத்தல் அகற்றித் தமிழ் நூல்களை ஆராயும் ஆய்வு நெறிக்கு இலக்கியமாக அரிய பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தாமே எழுதியும் மாரிவாயில் மங்கலக்குறிச்சிப் பொங்கல்விழா என்னும் செய்யுள் நூல்களைப் படைத்தும் தமிழுக்கு ஆக்கந்தரும் புலமைப் பணிகளை ஆர்வமுடன் செய்தார்கள்.

நாவலர் பாரதியாரவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராக வருவதற்குப் பல ஆண்டுகட்கு முன்னரே சிறந்த பல ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டுள்ளார்கள். தெய்வப்புலவர் திருவள்ளுவரைப் பற்றிப் பிற்காலத்தார் புனைத்து ரைத்தகாதையின் பொய்ம்மையினைப் புலப்படுத்தித் திருவள்ளுவரது மெய்ம்மை வரலாற்றினை யாவரும் உணர்ந்து போற்றும் முறையில் ‘திருவள்ளுவர்’ என்னும் ஆய்வு நூலையும, சங்க இலக்கிய ஆராய்ச்சியின் பயனாகச் ‘சேரர்பேரூர்’ ‘சேரர் தாய முறை’ என்னும் நூல்களையும், இராமாயணப்பெருங்காப்பி யத்தின் பாத்திரப்படைப்பின் வரலாற்றியல்பினைப் புலப்படுத்தும் நோக்குடன் "தசரதன் குறையும் கைகேயி நிறையும்’ என்னும் திறனாய்வு நூலையும் இவர்கள் வழக்கறிஞர் தொழிலை நடத்துங் காலத்திலேயே இயற்றியுள்ளார்கள். உலகவழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வழங்கும் புனைந்துரைக்கதைகளை அவ்வாறே நம்பி விடாமல் அவற்றின் உண்மை நிலையை நன்காராய்ந்து காய்தல் உவத்தலகற்றி அவற்றின் வன்மை மென்மைகளை உலகத்தார் உள்ளவாறு அறிந்துகொள்ளும்படி இவர்தம் ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ள திறம் அறிஞர்களால் வியந்து பாராட்டத்தகுவ தாகும். "அனுமன் இராம தூதனா?' 'பெண்மையறமும் புலமை நலமும் முதலிய தலைப்புக்களில் நாவலர் பாரதியாரவர்களால்3