பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெற்றிபெற்றார். 1913-இல் தாமே தமிழ் பயின்று ஆய்வுக்கட்டுரை வரைந்து முதுகலை (M.A) வகுப்பில் தேர்ச்சி பெற்றார். எட்டய புரத்தில் தோன்றிய இவரும் அவ்வூரிற் பிறந்த தேசியகவி சுப்பிரமணிய பாரதியாரும் இணைபிரியா நண்பர்கள். தமிழ் நூல்களை ஆர்வத்துடன் படித்து மகிழ்வதிலும் பாரதநாடு வெள்ளையராட்சியினின்றும் விடுதலை பெறவுழைக்கும் நாட்டுத் தொண்டிலும் இவ்விருவரும் ஒருங்கிணைந்து உழைத்தார்கள். தேசத்தொண்டர் வ. உ. சிதம்பரனார் அவர்கள் அரிதின் முயன்று நடத்திய கப்பல் கம்பெனியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தியவர் சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்த சோம சுந்தர பாரதியார் அவர்களே யாவர்.

தமிழ் நிலைபெற்ற மதுரை மாநகரில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கிய சோமசுந்தர பாரதியார் அவர்கள், அந்நகரிற் பாண்டித்துரைத்தேவர் அவர்களால் நிறுவப் பெற்ற மதுரைத் தமிழ்ச் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டார். தமிழிற் பெரும் புலமைபெற்ற அருணாசலக் கவிராயர், சுப்பிரமணியக் கவிராயர், கந்தசாமிக் கவிராயர், இலக்கணப் பெரும்புலமை ஆசான் சோழவந்தான் அரசஞ் சண்முகனார், பண்டிதமணி கதிரேசச் செட்டியார், செந்தமிழ்ப் பத்திராதிபர் திருநாராயண ஐயங்கார் முதலிய பெரும்புலவர்களுடன் பழகித் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் முதலிய உயர்ந்த தமிழ் நூல்களைக் கற்றுத் தெளிந்த செந்தமிழ்ப் புலமைச் செல்வராகத் திகழ்வாராயினர்.

மதி நுட்பமும் நூலறிவும் வாய்க்கப்பெற்று மதுரையிற் பெரும் பொருள் ஈட்டும் சிறந்த வழக்கறிஞராக விளங்கிய பாரதியார் அவர்களைச் செட்டிநாட்டரசர் ராஜாசர் அண்ணாமலைச் செட்டியாரவர்கள் தம்மால் நிறுவப்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்துறைப் பேராசிரியராகத் அமர்ந்து தமிழ்ப் பணி புரியவேண்டும் என விரும்பி அழைத்தார். அவர்களது அன்பார்ந்த வேண்டுகோளை மறுக்க இயலாமையாலும் தமக்கு இயல்பாகவுள்ள தமிழார்வத்தாலும் நாவலர் பாரதியாரவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைமைப்

2

2