உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

13



ஆனாலும், அந்தக் காலத்தில், ஒரு கட்டத்தில், சேரிச்சாம்பான், செட்டித் தெருவில் வாசலோரமாக நடந்து செல்லப்போக, அதற்குத் தண்டனையாக, அன்பின்றி, ஈவிரக்கமின்றி, வாசலிலிருந்த பூவரச மரத்தில் கட்டி வைத்து, திருக்கை மீன்வால் கொண்டு அடிஅடியென்று அடித்துப்போட்ட அதே 'சூனா பானா வை நீதிதேவன் சந்நிதானத்திலே நிறுத்தி வைத்து அபராதம் கட்டச் செய்த புள்ளி ஆயிற்றே இந்தச் சாம்பான்? சாம்பான் ராஜ்யத்திலே, அவர்தான் ஆறுகரைத் தலைக்கட்டிற்குத் தலைமைப் புள்ளி. கிழக்கே தாராடிப் பொட்டல்காட்டு வெளிதொடங்கி, மேற்கில் காளி ஆத்தா கம்மாய் முடியவும், வடக்கே வாஞ்சி அய்யன் நஞ்சைத்தாக்கிலிருந்து, தெற்கே செட்டிமார் சுடுகாடு வரையிலும் அங்கங்கே தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும், அங்கீகாரம் பெற்ற வாய்மையைப் பரவியும் விரவியும் வாழ்ந்து வருகின்ற நாற்பத்தெட்டு குடிகளுக்கும் இவரது வாக்குத்தான் வேதம்; வேதவாக்கு மயிர் பிளந்து நியாயம் வழங்குவதில் மன்னர்.

பாரதி கனவு கண்டாரே, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று! அந்த மன்னர் ரகம்! இயற்கைத் தாயின் மண் மடியிலே உழைத்து உழைத்து, உள்ளத்தை உயர்த்திக் கொண்ட சாம்பான், தன் அருமைத் திருமகன் வீரமணியை அவன் விருப்பப்படி விவசாயப் பட்டம் பெறவும் செய்துவிட்டார் அல்லவா? சாம்பான் என்றால், சாம்பான்தான்! ஒரு கெட்ட பழக்கம் உண்டா? மூச்! ... குடித்தால், தண்டனை என்று ராசாங்கம் விதி விதித்தது ஒரு பக்கம் இருக்கட்டும்! இங்கே, சாம்பான் ஆளுகைக்கு உட்பட்ட எல்லைக்குள் பறைச்சேரி ஆட்கள் யாருமே குடிக்கக் கூடாது; அதாவது, கள், சாராயம் அல்லது, மது எதையுமே குடிக்கக் கூடாது! இது, சாம்பான் சட்டம்! நாளைக்கே, மதுவிலக்கு ஒருவேளை தளர்த்தப் பட்டாலோ அல்லது நீக்கப்பட்டாலும் கூட, இந்தச் சேரிப்புறத்தில் யாருக்குமே குடிக்க அதிகாரம் இருக்காது!

சாம்பான் சிரித்தார்; மெய்மறந்து சிரித்தார், மெய்யை மறக்காமல் சிரித்தார்; இனம் விளங்கியதும், இனம் விளங்காததுமான ஒரு தவிப்புடன் ஏக்கத்துடன் ஆதங்கத்துடன் விம்மிக் கொண்டே சிரித்தார். 'காந்தி மகாத்மா...' தலையிலே லேஞ்சைக் கொய்து 'முண்டாசு சுற்றியவர், மறு இமைப்பில் அதை அவிழ்த்து ஏனோ ஆத்திரத்துடனும், ஆவேசத்துடனும் இயலாமையுடனும் எட்டத்திலே