உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

உள்ளுரில் இருந்து இப்படி வேதனைப் படுவதைவிட வெளியூர் சென்று நாலு வீடு கேட்டு வயிற்றுப் பசி தீர்த்துக்கொள்வது வகையான வாழ்வாகும். அங்குப் பகை இல்லை; உறவு இல்லை; இந்த நகை இல்லை. பூ இழந்த கொடியை எந்த வண்டும் நாடாது.

பொருளிழந்த வறியவனை எந்தச் சுற்றமும் சூழமாட்டார்கள். அவர்கள் தனித்து வாழ வேண்டியது தான்; சுற்றம் என்று சொல்லிக்கொள்ளத் தேவை இல்லை. அற்றபோது சற்று விலகி வாழ்வதே மேலாகும்.

30. தம் நிலையில் தாழாமை

(மானம்)

பணம் படைத்துவிட்டாய்; அது உன் உழைப்பால் வந்தது, ஒப்புக் கொள்கிறோம். அதனால் மற்றவர்களைத் தாழ்த்திப் பேச நினைக்கக் கூடாது. மற்றவர்களை வருத்தக் கூடாது. அப்படி வருத்தினால் அது பிறர் மனதைச் சுடும்; காட்டுத் தீப்போல் படும். மானம் உள்ளவர் அதனை நிதானமாக எடுத்துக் கொள்ளமாட்டார். அவர்கள் எரிமலையாக மாற இந்தக் கொடுமையாளர் தாம் காரணம்.

தோலும் எலும்புமாகத் தோன்றி வறுமையில் வாடினாலும் நல்லியல்பு இல்லாதவரிடத்துத் தம் குறைபாடு எடுத்து உரைக்கார். உரைத்தாலும் அவர்கள் என்ன குறைக்கவா போகிறார்கள். குறிப்பறிந்து உதவும் நிறை மனம் உடையவரிடத்துத் தம் குறைகளைக் கூறினால் தவறு இல்லை; அவர்கள் தீர்த்து வைப்பர்; நீ உன் நிலையில் தாழத் தேவை இல்லை.