பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

69

கிராமம் பிடிப்பதேயில்லை. அண்ணியின் தங்கை சென்னைப் பட்டணத்தில் இருக்கிறாள். அவளும் வேலை செய்கிறாள். பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பெரிய லீவுக்கு அங்கே செல்வார்கள். அப்போது அண்ணன் மட்டும் வந்து ஒப்புக்குத் தலை காட்டிவிட்டுப் போவான். இவன் எம்.எஸ்.சி., எம்.எட் படிக்க ஆதாரமாக இருந்த கிராமத்து மண் அவனுக்குப் பிடிக்கவில்லை. பிள்ளைகள் இங்கு வந்து ஒரு ராத்தங்கியதில்லை. காரில் காஞ்சிபுரம் போனார்கள் எல்லோரும். இங்கே வந்து அரை மணி தங்கினார்கள். எங்கிருந்தோ இளநீர் வெட்டி வந்து கொடுத்து, மைத்துனர் உபசாரம் செய்தார்.

மேலோட்டப் பெருமை. அம்மாவை அந்தக் காரில் கூட்டிச் சென்றுவிட்டு, செல்லும் வழியில் கடைப்பக்கம் இறக்கி விட்டுப் போனார்கள். நெருக்கியடித்துக் கொண்டு அந்த வண்டியில் போன பெருமை அம்மாவுக்குப் பட்டுப் பளபளப்பாக இருந்தது. அது நல்ல பட்டில்லை, வெறும் சாயம் குழம்பும் அற்பம் என்று யார் சொல்வது?

உறவும் மனிதச் சூடும் இல்லாமலே விலகிப் போகும் குடும்பத்தில் என்ன எதிர்பார்க்க முடியும்?

உள்ளே ரேடியோப் பாட்டுக் கேட்கிறது. விளக்கும் எரிகிறது.

“சரோசா நீ படிக்கிறியா பாட்டுக் கேக்குறியா? கரண்டு காச எவ கட்டுவது?”

“நீ செத்த சும்மா இரும்மா! நாங் கணக்குப் போடுறனில்ல? நீ வேற ஏன் தொந்தரவு பண்ணற?”

“அதுக்கு ரேடியோ இன்னாத்துக்கு?”

“அதும் வேணும். நான் பாட்டுக் கேட்டுட்டுக் கணக்குப் போடுவ...”

“ஏண்டி பாட்டுக் கேட்டுட்டே நீ என்னாடி படிக்கிறது? அத்த முதல்ல மூடு. படிக்க வேண்டிய பய்யன் ஊரு சுத்திட்டு வந்து சோறு ஒரு வாய் உள்ள போறப்பவே தூங்குறா. நீயானா...”