ராஜம் கிருஷ்ணன்
37
“அதென்னவோ, உங்கம்மாளக் கேளு! பூங்காவனப் பெரிம்மா சொன்னாங்களா, வேலுவும் தர்ம ராசுவும் குதிச்சாங்க. வரதராசன் வூட்ல பூசை வச்சாங்க. அவரு வந்திட்டுப் போனா, ஒடனே நல்லதெல்லாம் நடக்குதாம். கலியாணம் ஆகாம நின்னவங்களுக்கு மூணே நாளில் கலியாணம், வேல கிடைக்காதவங்களுக்கு வேல, கடன் இருந்தா எப்பிடியோ அடயுது. என்னெல்லாம் சொன்னாங்க. உங்கம்மா இப்பிடிப் போயி இந்தச் சேதியெல்லாம் கொண்டிட்டு வந்து பத்து நாளா குடஞ்சி தள்ளிட்டா. ஆக, நம்ம கைவுட்டு அஞ்சுக்குக் குளோசு. தாயத்து வச்சிருக்கிறே, விளக்குப் பக்கத்தில. கட்டிக்கிறவங்க கட்டிக்குங்க!”
“நம்பிக்கை இல்லேன்னா, எதுவும் வராது. நம்பணும். நாலு பேர் நடந்ததத்தான சொல்வாங்க. இவர முன்னபின்ன தெரியுமா? பொம்பிளைதோசம்னு பார்த்ததும் சொல்லிடல? நீங்க நம்ப மாட்டீங்க. எந்தச்சேரி ஆளுங்களும் உள்ள வந்து சொல்லுறத நம்புவீங்க? வக்கீல் வூட்ல பூசை பண்ணாராம். ஒரு மாசம் அந்தப் பூ வாடவே இல்லையாம்".
“இப்பதான சாமி இங்க வந்திருக்கு, இமயமலையவுட்டு? எப்படிப் பாட்டி ஒரு மாசம் பூ வாடல? இமயத்திலேந்து கொண்டுட்டு வந்த பூவா?” என்று சந்தடி சாக்கில் சரோகிண்டி விட்டுப் போகிறாள்.
அப்பாவுக்கு இருமல் தொடங்குகிறது.
சங்கிலித் தொடராக, இழுத்து இழுத்துக் கண்கள் செருகி மீண்டு திணற இருமல்.
செவந்தி பக்கத்தில் உட்கார்ந்து நீவி விடுகிறாள். “என்னப்பா..... அப்பா?...ந்தாம்மா வெந்நீ போட்டு வச்சிருந்தே. கொஞ்சம் கொண்டா.....”
வெந்நீரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கச் செய்கிறாள். பக்கத்தில் மின் விசிறியை இழுத்து வைக்கிறாள். "வேத்துக் கொட்டுது...”