உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

23

“இரட்டைப் பின்னல் கோரமெல்லாம் வேண்டாம்!” என்று இறுக வாரி அக்கா பின்னும்போது அவளுக்குப் பிடிக்கவேயில்லை. அவள் கண்காணாமல் பின்னலை அவிழ்த்துத் தளர்த்தியாகப் பின்னிக் கொள்வாள். கோணல் வகிடு வலப்புறம் இடப்புறம், இரட்டைப்பின்னல், அரைப் பின்னல் கொண்டை எல்லாம் போட்டுப் பார்த்துக் கொள்வாள். தன்னுடைய அடர்ந்த நீண்ட முடியைக் குறித்துத் தனியாகப் பெருமிதம் கொள்வாள். முழங்கைவரை ரவிக்கை, கண்களில் மை, நெற்றியில் பலவகைப் பொட்டுக்கள், செவிகளில் விதவிதமான அணிகள் என்று பள்ளிக்கு வரும் நளினியைக் கண்டு அவளைப் போன்ற பேறு தனக்கில்லையே என்று நெடுமூச்செறிந்திருக்கிறாள். ஒரு தடவை சுமதி தான் வாங்கிக் கொண்ட வாயில் சேலையை “மைத்தி, நீ உடுத்திக் கொள். நாளைக்கு நான் கட்டிக் கொள்கிறேன்” என்று சொல்லிக் கொடுத்தபோது பெரியக்காவுக்கு என்ன கோபம் வந்தது! பெரியக்காவைச் சொல்லப் போனால் அவளுடைய சகோதரி என்றுகூட சொல்ல மாட்டார்கள். குட்டை, நல்ல கறுப்பு. அவள் தாயைக் கொண்டு தனியாக இருந்தாள். மாமா சொன்னாற்போல் அவர்கள் நால்வரிலும் கடைக் குட்டியான அவளே பேரழகி. பெரியக்காவுக்குத் தன் அழகில் பொறாமை என்று உள்ளூரக் கொதித்துக் கொதித்து அடங்கிய அவள், பள்ளி இறுதிப் படியில் நிற்கும்போதுதான் படி இடறி...

சே--! அப்போது எப்படி இருந்தது?

வகுப்பில் அவன் முகமும் சிரிப்பும்தான் கண்முன் நிற்கும்.

அரையாண்டுத் தேர்வின் கணக்குத்தாளைப் பார்த்துக் சிந்தையில் அந்தச் சொற்களைச் சுழலவிட்டுக் கொண்டிருந்தாள். “அன்பே மகாபலிபுரம் சாலையில் வலப்புற சாமியார் குன்றுக்குப் பின் காத்திருக்கிறேன்: தனராஜ்!”

வீட்டு எல்லையைவிட்டுப் பள்ளிக்கூடத்தைத் தவிர எங்கும் சென்றறிந்திராத அவள் அந்தக் குன்றின் பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/25&oldid=1099692" இலிருந்து மீள்விக்கப்பட்டது