பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

27

வரப்பில் நடக்கிறாள். எட்டி முள்முருங்கை மரத்தின் பக்கம் வைத்திருக்கும் சைக்கிளை எடுத்துக் கொண்டு அவள் போவதையே பார்க்கிறாள் செவந்தி.

“ஏ, செவுந்தி? யாரு அந்தம்மா? கழனிக்குச் சைக்கிள்ல வார பொம்புளய இப்பதா பாக்கிறே!” என்று வியந்து பேசினாள் வேணி.

“ரொம்பக் கெட்டிக்காரி. நல்ல குணம். நான் முந்தா நா வங்கில பார்த்துச் சொன்னே. வந்து ஒரு நாள் வேலை செஞ்சிட்டுப் போயிட்டது...”

‘நா இதுக்கு மின்ன பாத்த நினைப்பில்ல... எந்தப் பக்கம்?”

“ஆவனியாபுரம் காலனின்னு சொல்லிச்சி..” என்று அலட்சியமாக ஆயா பாக்கைக் கடிக்கிறாள்.

"ஓ...?"

குரல் ஓங்கித் துவண்டு விழுகிறது.

"அதான பாத்தேன்! காலனிப் பொம்புள...! ஓ... அவளுவ நடை உடயப் பாரு. பேச்சப் பாரு! எங்கியோ ஆடுமாடக் கடிச்சிட்டுக் கிடந்து...”

"ஆயா” என்று செவுந்தி சுள்ளென்று விழுகிறாள்.

“இப்படி எல்லாம் பேசாதீங்க அவங்களும் நம்மப் போல மனுசங்க... இனிமே யார்ன்னாலும் இப்படிப் பேசுனா, எனக்குக் கெட்ட கோபம் வரும்.”

“என்ன கோபம் வரும்? ஆயிரம் பேசுனாலும், அவ சாதி சாதிதானே?”

"இல்ல. எல்லாம் மனிசசாதி”

“அவள உன் வீட்ல கூட்டிப்ப. நீ அவ வீட்ல போயிச் சோறு எடுப்ப?”

“ஆமாம், எடுப்பே இந்தச் சேத்தில் நின்னு பச்சையத் தொடுற நாமெல்லாந்தா ஒரே சாதி. ஒசந்த சாதி! இனிமே இப்படிப் பிரிச்சிப் பேசாதீங்க! நாங்க டிரெயினிங் எடுத்தம்.