பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விருப்பமானது போலும். பிறப்புக்களின் முன்கதை— பின்கதைகளும் அவளுக்கு நிழல்தரும் தருக்களாகின்றன. அவள் கதைகூட விசித்திரமானது தானே!...

பீஹார்ப் பூகம்பத்தில் அலைக்கழிந்த ஆயிரமாயிரம் சகோதர சகோதரிகட்கு அவள் தொண்டு செய்யும் பேறு பெறுகிறாள். ‘அன்பு எதையும் கேட்காது, கொடுக்கவே செய்யும்’ என்னும் காந்திஜியின் மூதுரைப் பாடம் அவளுக்கு அத்துபடி. முஸாபர்பூரிலிருந்து தன் பழைய காதலனுக்குக் கடிதம் ஒன்று வரைகிறாள். தில்லியில் வெள்ளையர் ஆட்சியில் பொருளாதாரத் துறையில் உயர்ந்த பதவியிலிருக்கும் ராகவனுக்கு, தானும் அவனும் காதல் பூண்டு ஒழுகிய நிகழ்ச்சிகளைக் கோடிட்டுக் காட்டி, பழைய விஷயங்களையெல்லாம் கடமை ஒழுங்குடன் எழுதுகிறாள். தனக்கும் தாரிணிக்கும் ஏற்பட்ட நட்புறவு ஒரு மாயக்கனவு என்று திட்டமிட்டு, அதை எப்படியோ மறக்க முயன்றுகொண்டிருந்த அவனுக்கு, அவள் சமூகப்பணி குறித்தும் ஏதேதோ எழுதுகிறாள்!

தாரிணி நல்ல பெண். அவள் ஒருமுறை பத்மாபுரத்துக்கு வந்திருந்தபோது, காமாட்சி அம்மாள் அவளிடம் கெஞ்சிக் கதறி, தன் மகன் வாழ்வில் குறுக்கிடாமல், ஒதுங்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டாள். தாரிணி நல்ல பெண். அவ்வாறே நடந்தாள். இப்பொழுது அவள் அவனுக்கு எழுதிய கடிதம் சலனத்தை உண்டாக்குகிறது. முடிவில் அவளுக்காக ‘இதுவா உன் கதி?’ என்று அவன் அனுதாபப்பட முடிந்ததுடன், தான் அவளை விட்டு விலக நேர்ந்ததுகூட நல்ல காலத்தினால்தான் என்று அமைதியுறவும் முடிந்தது! “ஜனக குமாரி பூமிக்குள் போனது போல் நானும் போய்விட விரும்புகிறேன்!”

24