உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

ஒட்டக் கூத்தரும் ஒருங்கு இணைத்துக் கூறப்பெறும் அரும் புலவர்களென்பது அறியப்பெறும். “கம்பனென்றும் கும்பனென்றும்“ என்ற தொடக்க முடைய தனிப் பாடலில் “காளி ஒட்டக் கூத்தன்“ என்று இவ்விருவரும் ஒருங்கு கூறப்பெற்றமை காண்க.

நம்பிகாளி ஒரு சமயம் நெற்குன்ற வாணரைப் பாடிப் பரிசில் பெறச்சென்றார். நெற்குன்ற வாணர் வெளியூர்க்குச் சென்றிருந்தார். அவர்தாதி நம்பிகாளியாரின் புலமையை அறிந்து சிறப்புக்களைச் செய்தாள். நெற்குன்ற வாணர் திரும்பியதும் இச்செய்தியை அறிந்து அகமிக மகிழ்ந்து பின்னும் அப்புலவர்க்குப் பல பரிசில்களை வழங்கினர். இதனைப்,

“பன்னுந் தமிழ்க்கவன் மாமனைத் தாதி பரிசளிப்ப
முன்நம்பி காளிக்கு நெற்குன்ற வாண முதலிஎன்போன்
பின்னும் சிலபல பொன்னும் கொடுத்துத்தன் பேர்நிறுத்த
மன்னும் தமிழு முரைத்தா னவன்தொண்டை மண்டலமே“

என்ற தொண்டை மண்டல சதகப் பாடலால் அறியலாம். நம்பிகாளியார் வல்லை என்னும் ஊரினர் ; யாதவ குலத்தினர். நெற்குன்ற வாணர் இந்நம்பி காளியிடம் மிகவும் ஈடுபாடு உடையராயினார். இவற்றைக்,

“கற்கும் கவிவல்லை யாதவர் கோன் நம்பி காளிக்கியாம்
விற்கும் பரிசனம் ஆகிவிட் டோம்வட வேங்கடமும்
பொற்குன்ற மும்புகழ்க் கங்கா நதியும் பொதியமும்போல்
நெற்குன்ற மும்நம் மரபும்எந் நாளும் நிலை நிற்கவே“

என்ற பாடல் பகரும். மேற்கூறப்பட்ட செய்திகளிலிருந்து நெற்குன்ற வாணரது செந்தமிழ்ப் புலமையும் பெருங்கொடைத் திறனும் பெறப்படும்.

7