பக்கம்:நூறாசிரியம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

நூறாசிரியம்

உள்ள வளர்ச்சியின் கூறுபாடே விலங்கின நிலையினின்று முற்றும் மாறுபடா உள்ளங் கொண்டோனுக்கோ, எல்லாப் பெண்டிரும் மருவுதற் கேற்றவர் என்ற எண்ணமே கால் கொள்ளும். உள்ளம் மேலுரர்ந்து சிறந்தோனுக்கோ, தான் மருவுதற்குரிய பெண் தவிரப் பிறரெல்லாம் தாயும் தமக்கையும் தங்கையுமாகவே தோன்றுவர். ஒழுக்க நிலையான் காணப்பெறும் இவ்வேறுபாடும். உண்ணுதல், உறங்குதல், காத்தல், இணைதல் முதலிய வினை நிலையான் கருதப் பெறும் பிற வேறுபாடுகளும் கருதியே மாவினும் புள்ளினும் மயங்கியோர் என்று கூறப்பெற்றது.

நெஞ்சே! அத்திறத்தோரிடத்து வானினும் உயர்ந்து போதல் முதலாய திறமைகளை வருவித்துக் கொண்டு அவரிடத்தினின்று தப்பி உய்க என்பது பாட்டு.

வானினும் உயர்க : சேய்த்தோர்க்கு அணிமையும், அணித்தோர்க்குச் சேய்மையுமாய்ப் புலப்படும் வானை விட உயர்ந்து செல்.

தொலைவினின்று காண்போர்க்கு மிகவும் நெருக்கமுற்றது போல் தோன்றினும், நெருங்கினார்க்குத் தொலைவிலுள்ளதாகத் தெரிவது வானம். அது போல், தொலைவினின்று மாந்தற்றன்மை குன்றியோர்க்கு நாம் நெருக்கமுற்றவர் போல் தோன்றினாலும், நெருங்கிப் பார்க்குமிடத்து அவர் நிலைக்கு எட்டாதவாறு நம் நெஞ்சமும் வினையும் சேய்மையனவாகப் புலப்படுதல் வேண்டும் என்றவாறு. இனி வான் போலும் உயர்க என்னாது, வானை விட உயர்க என்று மேலும் உயர்ச்சி காட்டியது, மாவினும் புள்ளினும் மயங்கியோரை இன்னுங் கீழ்மையினால் தாழ்த்துதல் வேண்டி என்க.

நெஞ்சின் விளக்கம் முன்னொரு பாட்டில் கூறப்பெற்றது.

வானத்து மீனினும் படர்கதன் நினைவே: வானத்தே மீனினம் பகலிற் கரந்திருந்து இரவிற் படர்வது போல், அவர்க்கு ஆரவாரத்தே புலப்படா நின்று, அமைதியிற் புலப்படுத்துதல் வேண்டும் என்க. பகல் ஆரவாரக் காலமும் இரவு அமைதியின் காலமுமாம் என்றறிக. இனி, வெற்று வானம் போல் தோன்றுமிடத்து உற்று நோக்கிய வழி மீனினம் படர்ந்திருத்தல் புலப்படுதல் போல், துணுகி நோக்கினார்க்கன்றி நுண்ணோக்கற்ற மாவினும் புள்ளினும் மயங்கியோர்க்கு நம் திறம் புலப்படுதல் தேவையன்று என்பதறிக.

வேண்டாவிடத்து நம் நுட்டம் வெளிப்படுத்தப் பெறுவதொன்றன்று என்க.

'நினைவு' என்னும் சொற்பொருள் 'நெஞ்சு நிலனாக' நினைவு வித்தாக என்ற பாட்டில் விளக்கப் பெற்றது. நினைவு மீன் படர்தலுக்கு வான் நெஞ்சம் புலப்படக் கூறியது காண்க!

மின்னினும் ஆன்றொளி சுடர்கநல் அறிவே: மின்னித் தோன்றும் ஒளிப்போலும், ஆனால் விளங்கியும் சுடர்தல் வேண்டும் என்பது மின்னித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/108&oldid=1221531" இலிருந்து மீள்விக்கப்பட்டது