பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278


இலக்கியப் பற்று மிகுந்தவர். சுவாமிகளின் பக்தி ரசக் கீர்த்தனை என்ற நூலினையும், லவகுசா நாடகக் கையெழுத்துப் படியினையும் அவர் காலமாகுமுன் எனக்குக் கொடுத்து உதவியவர் என்பதை நன்றியோடு இங்குக் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் போனபின் வேலூரில் சில நாடகங்கள் நடந்தன. வசூல் இல்லை. சாஸ்திரி அடிக்கடி வெளியூருக்குப் போய்க் கொண்டிருந்தார். சாப்பாட்டு நிருவாகம் ஒரே ஊழலாக இருந்தது. ஒருநாள் பகல் பதினொரு மணிவரை அடுப்பே எரியவில்லை. அதற்கு மேல் அரிசி காய் கறிகள் எல்லாம் வந்தன. சமையல் ஆரம்ப மாயிற்று. பிற்பகல் இரண்டரை மணிக்குத்தான் உணவு கிடைத்தது. நாங்கள், இருக்கும் நிலைமையைப் பார்த்து வருந்தினோம். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கம்பெனிக்கு யார் பொறுப்பாளி யென சாஸ்திரியைக் கேட்டோம். திருப்தியான பதில் கிடைக்கவில்லை. “நாங்கள் இந்த நிலைமையில் இங்கே இருப்பது சாத்தியமில்லை; எங்களை ஊருக்கு அனுப்பி விடுங்கள்” என்று வேண்டினோம். சாஸ்திரியும் சிந்தித்தார் கடைசியாய் எப்படியோ ஒருவகையாக நாங்கள் திண்டுக்கல்லுக்கு வந்து சேர்ந்தோம்:

எட்டையபுரத்தார் பரிவு

எட்டயபுரம் இளையராஜா காசி விஸ்வநாத பாண்டியன் சில காலம் சொந்தக் கம்பெனி வைத்து நடத்தினார். பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் கம்பெனி கலைக்கப்பட்டது. அக்கம்பெனியின் காட்சிகளும் உடைகளும் அவரிடமிருந்தன. அவற்றில் உபயோகமான பொருட்களை எங்களுக்கு கொடுத்து உதவுவதாகக் கூறினார். மீண்டும் கம்பெனியைத் தொடங்குமாறு வற்புறுத்தினார்.

எங்களிடம் ஏற்கனவே இருந்த காட்சிகள், உடைகள் இவற்றுடன் எட்டையபுரம் இளைய ராஜா காசி விசுவநாதபாண்டியன் அவர்கள், அன்புடனளித்த சில சாமான்களையும் வைத்துக் கொண்டு மீண்டும் திண்டுக்கல்லிலேயே கம்பெனியைத் துவக்கினோம். பழைய நடிகர்களில் பலர் மறுபடியும் வந்து சேர்ந்தார்கள். புதிதாகச் சில நடிகர்களையும் சேர்த்துக்கொண்டோம். கம்பெனி ஒழுங்காக நடைபெற்றது.