பக்கம்:நூறாசிரியம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

83


தோன்றுதலால் மின்ன லென்றும் மீன் என்றும் பெயர் பெற்றன. ஒளித் திறன் அவை போன்றதாம் என்னினும் ஆன்று சுடர்தல் வேண்டும் என்று வேண்டப் பெற்றது. சடுத்தப் பாய்ச்சலும், ஒளி மண்டிச் சுடர்தலும் பெற்ற அறிவு, மாவினும் புள்ளினும் மயங்கி யோர்க்கு ஒளி கொளுத்தலும், பயன் தருதலும் ஆகிய வினைகள் மேற்கொள்ளுதல் வேண்டுமன்றோ? எனவே சுடர்க அறிவு எனலாயிற்று பயன் நல்குதலால் நல் அறிவு எனப் பெற்றது.

அறிவதும் வாரியின் மிகுகவன் வலி:அவ்வறிவும் கடல் போலும் மழை முகிற்போலும் வன்வலி மிகுவதாகும் என்றவாறு.

நீரை வாரலால் கடலும் முகிலும் வாரி எனப்பட்டன.

நீர் நிலத்தளவில் வலி மிக்க பொருள். ஆக்கலும் அழித்தலும் அதனிடத்து உளவாகலின், தேக்கமும் படர்வும் அதன் வலித்திறன்களாகும். தேக்கமுற்றது கடலும், படர்வுற்றது முகிலும் ஆகலான் இருபொரு ளொருசொல் பெய்யப் பெற்றது; வாங்கலும் வழங்குதலும் அவ்விரண்டின் வினைகள். இவ்விரண்டானும் வலி மிகுதல், தம் நிலை தப்புதற்கும் மாவினும் புள்ளினும் மயங்கியோர் நிலை வெல்வதற்கும் வேண்டி என்க. அறிவற்றன வாங்கி, அறிவாயின வழங்குதலும் உய்த்துணர்க.

வளியினும் தான்திற முறுக- காற்றினும் திறமுற்று விளங்குக. கால்வதால் காற்றும் , வலிதலால் வளியும் என்க. கால் நீளுதல். வலிவளி அடர்த்துப் பெருகுதல், வளைதல், சுழலுதல், வாருதல் ஆய வலிந்த வினைபற்றி யிருத்தலான் வளி என்றாயிற்று. இத் திறன்கள் முற்றும் பகை வெல்லுந் திறமாயின. பற்றி அவை மிகுதல் வேண்டும் எனலானது.

தனலினும் தெறுக- தீயினும் பற்றி யழிக்க தழல்தணல் பற்றல், படர்தல், பெருகுதல், ஆட் கொள்ளுதல் ஆயவினைகள் தீயினுக்கு உரி யவாகலின் தீ, தழல் எனப் பெற்றது.

தள்-தழ்-தழதழல்; தள்-தழ்-தழ-தழை தீ, தள தள வென்று எரிந்தது. தள தள எனும் அடுக்கு தண தண வென்றும் வரும்.

தண்ணினும் தண்ணுக குளிர்ச்சியினும் குளிர்ச்சியுறுக அறிவு கனன்று எழுந்த விடத்து விளங்கியும் தண்ணியவிடத்து அடங்கியும் தோன்றும் கனன்றது அறிவென்றும், தணந்தது அன்பென்றும் பெயர் பெறும் அறிவு வெப்பமும், அன்பு தட்பமும் வாய்ந்தது. அறிவுஅடங்கி அன்பாகி ஆக்கமும், அன்பு எழுச்சியுற்று அழிவும் சேர்க்கும்.

அறிவான் தெறலும். அன்பான் பொறலும் செய்து மாவினும் புள்ளினும் மயங்கியோரிடத்து விறல் பெற வேண்டும் என்பதாம் என்க.

மண்ணினும் திண்ணுக: நிலம் போலும் திண்மை யுடையதாகுக. மண் பொருந்துதல், முன்பொரு பாட்டான் விளக்கப்பெற்றது. பூதப்பொருள்கள் நான்கு மேவிய ஐந்தாம் பூதம் மண் மண் மேலும் மேலும் இறுகலுறுவ தொன்றாகலின் மண் போலும் அதனினும் மிகவும் திண்ணுக வென்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/109&oldid=1181927" இலிருந்து மீள்விக்கப்பட்டது