பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268


விக்கு வந்து சேர்ந்தோம். மூன்றாண்டுகள் நாயுடுவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தோம். ஒப்பந்தப்படி பதினொரு மாத காலந்தான் நாடகம் நடந்தது. எங்களுக்கு வர வேண்டிய சம்பளப் பாக்கிக்கு நோட்டு எழுதிக் கொடுத்தார் நாயுடு. கம்பெனியில் இருக்க விருப்பமில்லாதவர்கள் எங்களோடு வந்து விடலாமென்றும் அவர்களை அனுப்பி வைப்பதாகவும் பெரியண்ணா கூறினார். பெரும்பாலோர் எங்களோடு வர விரும்பவில்லை. ஒராண்டு காலமாகத் தொடர்பு விட்டுப்போனதால் எல்லோரும் நாயுடுவுடனேயே இருக்க விரும்புவதாகவும் கூறிவிட்டார்கள்.

மீண்டும் காமேஸ்வரய்யர்

எங்கிருந்தோ பழைய காமேஸ்வரய்யர் வந்து சேர்ந்தார். தாம் பணம் தருவதாகவும், கம்பெனியைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென்றும் துாண்டினார். பெரியண்ணா அப்போது ஆத்திரத்தோடு கூறிய வார்த்தைகளை இன்னும் என்னல் மறக்க முடியவில்லை.

“எவ்வளவோ கஷ்டங்கள் எங்களுக்கு வந்தது; ஆனாலும் நாங்கள் கலங்கவில்லை. எங்களுக்கென்றிருந்த ஒரே ஒரு சிறு நிலத்தை உங்கள் சம்பளப் பாக்கிக்காக அடகு வைக்கும் நெருக்கடியை உண்டாக்கினீர்கள். நிலமும் அடகு வைக்கப் பட்டது. உங்கள் சம்பளமும் வசூல் செய்யப்பட்டது. இப்போது ஒத்தாசை செய்வதாகப் பாசாங்கு செய்கிறீர்கள்! அனந்தகோடி வந்தனம். உங்கள் ஒத்தாசையில் கம்பெனி நடப்பதை நான் விரும்பவில்லை. எங்கள் தலையெழுத்துப்படி நடக்கட்டும். நீங்கள் போய்வரலாம்”.

என்று கண் கலங்கக் கூறினார் பெரியண்ணா, காட்சிகள், உடைகள் இவற்றையெல்லாம் ஒரு வீட்டை வாடகைக்குப் பேசி, அதிலேபோட முடிவு செய்தார். நாங்கள் புறப்படும் சமயம் சாமான்களை வாடகை வீட்டில் சேர்ப்பிக்கக்கூட யாரும் ஒத்தாசைக்கு வரவில்லை. திருச்சிராப்பள்ளி ரங்கவிலாஸ் தியேட்டருக்கு உள்ளேயே கம்பெனி வீடு இருந்தது. நாயுடு வாயிலில் நாற்காலியின் மேல் உட்கார்ந்திருந்தார். அவருக்குப் பயந்துகொண்டு நடிகர்கள் யாருமே வெளி வரவில்லை.