X
பற்றியும் எனக்கு நன்றாகவே தெரியும். அதே சமயம் நானே விருதை சாமர்த்தியமாக வாங்கிக் கொண்டதாக, அப்போதைய ஆரம்ப கால எழுத்தாளரும், இப்போதைய சிறந்த படைப்பாளியுமான ஜெயமோகன் இந்தியா டுடே பத்திரிகையில் எழுதியபோது, நான் துடித்துப்போனேன்.
இதுபோதாது என்பதுபோல், "கணையாழி", எனக்கு விருது வழங்கியதை, "இலக்கியத்தில் இடஒதுக்கீடு வந்துவிட்டது" என்று வர்ணித்தது. (இந்தக் "கணையாழி'யின் ஆசிரியரான கஸ்தூரிரங்கன், தன்னை ஆசிரியராகக் கொண்ட "தினமணிக் கதிரில்", ஒரு சிறந்த இலக்கியவாதிக்கு பரிசு கிடைத்து இருக்கிறது என்று கேள்வி பதிவில் குறிப்பிட்டார்) இந்த "கணையாழி" வர்ணனை, மிகப் பெரிய இலக்கியப் பரபரப்பை ஏற்படுத்தி, என்னையும், நான் சார்ந்திருக்கும் முற்போக்கு மற்றும் தேசிய முழக்க இயக்கங்களையும் ஆவேசப்படுத்தியது. மனிதநேயத் தலைவர் ஜி.கே. மூப்பனார் அவர்கள் கூட, இந்த வர்ணனையால் மிகவும் வருந்தினார். இதற்காகவே ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், 1960-களில் நான் எழுதிவந்த தேசிய முழக்கப் பத்திரிகை சகாக்கள் தில்லித் தமிழ்ச் சங்கம், அகில இந்திய எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகள் என்னைப் பாராட்டி மகிழ்ந்தன. மகிழ்வித்தன. விசித்திரங்கள்...
இந்த விருது பற்றிய விவகாரங்களில் பல விசித்திரங்கள் அடங்கியுள்ளன. முதலாவதாக, அரசு அலுவலகங்களில் இட ஒதுக்கீடால் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களை மையமாகக் கொண்ட இந்த நாவலுக்கான விருதினை, "இட ஒதுக்கீடு' என்று வர்ணித்ததுதான். இதில் உள்ளடங்கிய "ஒருநாள் போதுமா?" என்ற குறுநாவல் விமர்சிக்கப்படாதது, இந்த விசித்திரத்தில் ஒரு துணை விசித்திரம்.
இரண்டாவது விசித்திரமாக, இந்த நாவலுக்கான விருதைக் கண்டித்து 'சாகித்திய அக்காதெமி'க்குத் தந்தி கொடுக்க வேண்டுமென்று புலம்பிய நெல்லைக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரை, புதுவையில் ஒரு கருத்தரங்கில் சந்தித்தேன். இந்தப் படைப்பு இரண்டு குறுநாவல்களைக் கொண்டது என்பதுகூட, அந்தப் பேராசிரியப் புலிக்குத் தெரியாது. பிற்படுத்தப்பட்ட எழுத்தாளர்களைச் சாடினால்தான் இலக்கிய மேட்டுக்குடியின் அங்கீகாரம் கிடைக்குமென்று தப்பாகவோ, சரியாகவோ நினைத்த அந்த அப்பாவிக்காக நான் அனுதாபப்பட்டேன்