சு. சமுத்திரம் 31
ஸ்டேஷனரி கம்பெனி, மோசடிக்குப் பெயர் போனது. இவருக்கு அடிக்கடி பணம் கொடுக்கிறார்கள். இதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. இவை, தேவையானால் கோர்ட்டுக்குக் கொண்டு போகப்படும்.
நல்லிதயம் படைத்த அக்கெளண்டண்டும், நிர்வாக அதிகாரியும் எம் கம்பெனிக்காக கொட்டேஷன்படி செய்த சிபாரிசு வரைவை உதவி டைரக்டர் அடித்து விட்டு, ஏதேச்சாதிகாரமாய், வேறு கம்பெனியை சிபாரிசு செய்திருக்கிறார். நாங்கள், பல்வேறு தொழில்களை நடத்துவதால், இந்தத் தொழிலை சரியாகச் செய்ய முடியவில்லை என்று அவர் வாதிடுவதும் அனாவசியமானது. ஆதாரமற்றது. மாநில அரசு, எம் கம்பெனி மீது நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட விவகாரம், இப்போது கோர்ட்டில் உள்ளது. இது. கோர்ட்டை அவமதிக்கும் சட்டப் பிரச்சினையாகும். இதனை, திரு. சரவணன், உங்களுக்குத் தெரியப் படுத்தியது. அசல் அவதூறாகும்.
ஆகையால், சட்டப்படி, குறைந்த கொட்டேஷன் கொடுத்த எங்களுக்கு காண்டிராக்ட் கொடுப்பதுடன், திரு. சரவணன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.
இப்படிக்கு, செளமி நாராயணன் செளநா ஸ்டேஷனரி மார்ட்டிற்காக
நீண்ட மெளனம் தலைமையிடம், சரவணனிடம் காமென்ட் கேட்டு எழுதிய கடிதம் புகார் கடிதத்துடன் இணைக்கப் பட்டிருந்தது. சரவணன் நிர்வாக அதிகாரியைப் பார்த்தான். செளரி நாராயணன் கம்பெனியை சிபாரிசு செய்யக் கூடாது என்று அவன் தெரிவித்தபோது, அவர் படபடத்தும், துடிதுடித்தும், கிறுக்குப் பயல். ஆனால் நல்லவன் ஸார். பத்து வருஷமாய் நம்மோட தொடர்பு உள்ளவன் ஸார். பிழைச்சிட்டுப் போறான் ஸார் என்று பட்டும் படாமலும், அப்போது பேசியது அவனுக்கு இப்போது நினைவுக்கு வந்தது. அவரை விட்டுவிட்டு, சரவணன், அக்கெளண்டண்ட் ராமச்சந்திரனைப் பார்த்தான். அந்தக் கம்பெனியில், இந்த ஆசாமி பார்ட் டைம் வேலை பார்ப்பதாய் பேச்சு அடிப்பட்டதே. உண்மையாய் இருக்குமோ? இந்த உமா இப்போ நகத்தைக் கடிக்கிறாள். செளரி நாராயணன் வீட்டில், ஏதோ ஒரு விசேஷத்தின் போது இவள் போயிருந்தாளாம். போனதில் தப்பில்லை. ஒருவேளை அங்கே அவன் காதைக் கடித்திருப்பாளோ? அன்னத்திற்கு, நிர்வாக அதிகாரியும், தலைமை கிளார்க் பத்மாவும் போட்டிருந்த வாய்மொழி ஆணையையும் நினைத்துப் பார்த்தான். தாக்கீதுகளை, ரிஜிஸ்டரில் அனுப்பாமல் தடுத்திருக்கிறார்கள்.