வெட்டியதன் மூலம், துரோணர் உழைக்கும் மக்களின் மாண்பை அழித்தார். தலித் மக்களைத் தந்திரமாக ஒடுக்கினார் என்று படிக்கிறோம். ஆனால், அர்ச்சுனன், துரோணரின் உதவியோடு, இந்த சதியை செய்து முடிக்கிறான் என்பது இந்தக் கதை… இதே கதையில், இன்னொரு கோணத்தையும் சிறப்பாக முன் வைக்கிறார் சமுத்திரம். துரோணரையும், ஏகலைவனையும், எதிர் நிலைகளில் நிறுத்தியபடி கதையின் கோணம் மாறுகிறது. இந்தக் கதையில், அர்ச்சுனனும், ஏகலைவனும் எதிர் நிலையில் காண்பிக்கப் படுகிறார்கள்… காவடி ஆட்டத்தில் தேர்ந்த கலைஞன் முருகன் திறமைசாலிதான், சந்தேகத்திற்கு இடமில்லை. திறமையோடு, திமிர்த்தனமும் சேர்ந்து விடுவதால், விழாவின் நிர்வாகிகளை எதிர்த்தும் நிற்கிறான், நாமும் ரசிக்கிறோம். அதே சமயம், தன் வெற்றிக்குத் துணை வரும் சக கலைஞர்களை இவன் கலைஞர்களாக மதிக்கவில்லை. தன் வெற்றிக்காக அவர்களை உரமாக்குகிறான். ஏகலைவர்களாக ஆக்குகிறான். இப்படி உரமாக்கி, உறுதி அழித்து அர்ச்சுனனாய் முன்னுக்கு நிற்கிறான்… இக்கதையின் கோணம், பிரச்சனைக்கு உரியது மட்டுமல்ல, ஆழ்ந்த புரிதலுக்கும் உரியது.
திரட்சியான கதைகள்… செறிவும், அழகும் சேர்ந்த தமிழ் நடை… வகை வகையான உத்திகள்… எல்லாவற்றிற்காகவும் பாராட்டுக்குரியவர் சு.சமுத்திரம்…
போலித் தமிழ்த் தாயின் அக்கிரமங்களை துணிவோடு, தமிழ் இலக்கியத்தில் பதித்தவர் என்ற முறையிலும், சு.சமுத்திரம் பாராட்டுக்குரியவர். இம்முறையில், நமது கால வரலாற்றை, அக்கறையோடு, அழுத்தமாக, தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் பதித்திருக்கிறார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் எழுதப்பட்ட கதைகள் அல்ல இவை. பல மாதங்களுக்கு முன்பே எழுதப்பட்ட கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. சமுத்திரத்தின் துணிவு, வீரம் பாராட்டுக்குரியது. தமிழ் வாசகர்கள், இதனையும் கண்டு கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.
மேலும்,தமிழர்களில் அர்ச்சுனர்களாகிய சிலர், பெரும்பான்மையான தமிழ் மக்களை ஏகலைவர்களாக மாற்றி, அவர்களை ஏணிப்படிகளாக்கி உயரத்தில் நிற்கிறார்கள் என்ற முறையிலும் இக்கதைகளை வாசிக்கலாம்…