உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிழல் முகங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சு. சமுத்திரம்

பயல், தனக்காகத் காத்து நின்ற நவாப்ஜானின் கையையும், பலராமனின் இடுப்பையும் பற்றியபடியே நடந்தான். மூவரும் சொந்த இருக்கைக்குக்கு வந்தார்கள். அப்போது, அந்தப் பெண்கள் இருவரும், இவர்களின் இருக்கைகளில் ராணிகள் போல் கால்மேல் கால் போட்டு கைமேல் கை பின்னி உட்கார்ந்திருந்தார்கள். இந்த மூவரையும் பார்த்துவிட்டு ஒப்புக்கு எழப் போனார்கள். எதிர் பெஞ்சில் உட்கார்ந்திருந்த வாலிபன் "இங்கே வந்து உட்காருங்க" என்று சொல்லி, உடம்பைக் குறுக்கினான். அவர்களில் எவளாவது ஒருத்தி உட்காருவாள் என்ற நப்பாசையுடன்,

அவன், ஆனந்தமாக எதிர்பார்த்தபோது, பலராமன்தான் அவன் பாதி உடம்பில் விலா படும்படி உட்கார்ந்தான்.

அந்த ரயில் மலையைக் கிழித்துக் கொண்டு போவதுபோல், குகைகளுக்குள் பாய்ந்து வெட்டவெளிக்குள் வெளிப்பட்டுப் பாய்ந்தது. இருபக்கமும் வியாபித்த காடுகளும், அந்த ரயில்வண்டி மூலம் குரலிடுவது போன்ற தோரணை. நிசப்தத்தின் நிஷ்டுரமாகத் தோன்றிய அந்தப் பெருங்காட்டில், இதே ரயிலோசையைத் தவிர வேறு எந்த ஓசையும் இல்லை. சக்கரக்கால்கள் கொண்ட ஒரு அசுரன், அஸ்வமேத யாகம் நடத்திக் கொண்டிருப்பது போன்ற பிரமை, எதிரே குறுக்கிடும் எதையும் சல்லி சல்லியாய்க் கிழித்துப் போடத் துணிந்து விட்டது போன்ற பிரமிப்பு. தக்காரும், மிக்காரும் இன்றி ஒட்டம் போட்டது. பார்த்த இடமெல்லாம் மரங்களாகவும், பாறைகளாகவும் தென்பட்ட அந்தக் காட்டுப் பூமியில், இந்த ரயில் பச்சைத் துணியில் வெள்ளை நூல் சுற்றிய ஊசியைக் குத்தி வைத்திருப்பதுபோல் காட்சி தந்தது.

ஒரு சின்னப் பையன், அந்தப் பெட்டிக்குள் வந்தான். கிழிந்து போன கால் சட்டைக்காரன். அந்தப் பெட்டி முழுவதையும் துடப்பத்தால் துடைத்து விட்டு, கையேந்தினான். பலராமன் அவனுக்குப் பத்து பைசா போட்டான். நவாப்ஜான் அதட்டினான்.

"நீயே ஒரு துடப்பம். ஒனக்கு ஒரு சின்னத் துடப்பமா. அந்த முதலாவது வகுப்புக் பெட்டிக்காரன் குப்பை குப்பைன்னு கரடியாய்க் கத்தினான். போனியாடா மச்சான்?"

"டேய் சாய்பு: மொதல்ல உட்காருடா..."

"போய் பெருக்கிட்டு வாடா பயலே. இல்லாட்டி உன்னோடு என்னையும் சேர்த்து மசாலா பண்ணிடுவாங்க."

"அட சொம்மா துள்ளாதடா. கிழவன் கத்துன களைப்புல துங்கிட்டான். பழையபடியும் குலைக்கும்போது பார்த்துக்கலாம்."

"டேய் பலராமா. ஏன்டா ஸ்வெட்டரைக் கழட்டிட்டே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/29&oldid=588213" இலிருந்து மீள்விக்கப்பட்டது