பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

57


பழம் வாங்கப்போனவரை இன்னும் காணுமே என்று கடையில் இருந்தபடியே, பஸ் வரும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தவள். லாரியில் வந்திறங்கியவர்களில் யாராவது ஜூஸ் சாப்பிடுவார்கள் என்று. ஆனந்தமான எதிர்பார்ப்புடனும், அப்பாவித்தனமாகவும் சிரித்தபோது லாரியில் இறங்கியவர்கள், அந்தக் கடையைப் பார்த்தார்கள். என்ன திமிர்... பாராங்குசத்தின் தேர்தல் சுவரொட்டியை வச்சிருக்காள்... நம்மை குண்டர்கள் என்று சொல்லி அழைக்கும் இன்னொரு தட்டியையும் வச்சிருக்காள்... இதுவும் பத்தாது என்று, நம்மைப் பார்த்துச் சிரிக்கிறாள்... ஆம்புளைகள் எல்லாம் ஓடி ஒளிந்து கொண்டபோது, ஒரு பொம்பிளை சிரிக்கிறாள்... என்னதான் நினைச்சிக்கிட்டாள்... இவ்வளவு திமிரா...

லாரித் தொண்டர்கள் அந்தக் கடையை நோக்கிப் பாய்ந்தார்கள். கலர் பாட்டல்களை எடுத்து, மிக்ஸி யந்திரத்தை அடித்தார்கள். பெட்டிக்கடையை, கீழே இழுத்துப் போட்டார்கள். கண்ணாடிப் பீங்கான்களை தூக்கிப்போட்டு உடைத்தார்கள். மிக்ஸி யந்திரத்தை தனியாக எடுத்து, ஒரு கல்லை வைத்து அடித்து அடித்து கடைசியில் உருத்தெரியாமல் ஆக்கினார்கள். ஒன்றும் புரியாமல் வெளியே ஓடிவந்த ராமையாவின் மனைவியின் தலைமுடியைப் பிடித்திழுத்து மல்லாக்கத் தள்ளினார்க்ள். 'அவ்வளவு திமுறாடி' என்று சொல்லிக்கொண்டே இடுப்பை மிதித்தார்கள். அந்த வேகத்தில் குப்புறப் புரண்டவளின், தலையில் மிதித்தார்கள். முதுகில் ஏறி நின்று, கழுத்தை உதைத்தார்கள்.

எத்தனையோ பேருக்கு தாய்மையின் கனிவோடு, 'ஐஸ்' போட்டு, 'ஜூஸ்' போட்டுக் கொடுத்த ராமையா மனைவியின் மேனி முழுவதும் சாறுதிரண்ட சக்கையாகியது. வாயில் நுரை தள்ளியது. உடம்பு, அவள் போடும் 'ஐஸ்' மாதிரி குளிர்ந்து கொண்டே போனது.