உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகம் தெரியா மனுசி

9


வலிய கணக்கெழுத்தும், மணியக்காரரும், பட்டு வேட்டியும், ஜரிகை தலைப்பாகையும், வைரக்கடுக்கனும், பச்சைக்கல் டோலக்கும், மார்பில் வைரப் பதக்கமும், வலது கையில் தங்கத்தாலான வீர காண்டாமணியும், தோளில் பட்டு நேரியலுமாய், மீசைகளை முறுக்கியபடியே, கிழவியிடம் பேசுவது தங்கள் தகுதிக்கு குறைவு என்பதுபோல் சிறிது விலகி நின்றார்கள். வெப்பமற்ற, இதமான காற்று அடித்த அந்த வேளையிலும், அவர்களுக்கு இரண்டுபேர் குடைபிடித்துக் கொண்டிருந்தார்கள். பூமாரி நெடுஞ்சாண் கிடையாக அவர்கள் கால்களில் விழுந்தாள். 'எந்தத் தப்பு செய்திருந்தாலும் என்னை காலால இடறி கையால உதறிப்போடுங்க சாமிகளா' என்று ஒலமிட்டாள்.

இதற்குள் வலிய கணக்கெழுத்து, பனையோலைச் சுவடிகளில் ஒன்றை எடுத்து, ஏவலாள் ஒருவனிடம் கிசுகிசுத்தார். அந்த ஏவலாளி, பூமாரியிடம் எதிர்ப்பாளியாய் கேட்டான்.

“ஏய் கிழவி! நீ குப்பாச்சா கட்டல. பனையிரை கட்டல, ஏணிப்பாணம் கொடுக்கல. ஒன் மனசுல என்னழா நினைச்சுகிட்டே?”

“ஏமானே! இன்னைக்கு கருப்பெட்டி வித்துட்டா வரிக்காசு முழுசும் சேர்ந்துரும். நாளிக்கு அதிகார கச்சேரியில வந்து கட்டிடுவேன் ஏமானே”

“ஒன் புருஷன் இசக்கிமாடன ஊழியம் செய்ய வரச்சொல்லு. கிழட்டுப்பய எங்கழா போயிட்டான்?”

“வந்துருவாவு. ஏமானே... திங்கள் சந்தையில ஒரு கன்னிப்பேய ஒட்டுறதுக்கு போயிருக்காவ'... வந்தவுடனே ஊழியத்துக்கு அனுப்பி வைக்கேன். சர்க்காருக்கு ஊழியமுன்னா சந்தோஷமா செய்யற மனுஷன்.”

வலிய கணக்கெழுத்தும், மணியம் கச்சேரியும் திருப்தியாக தலையாட்டியபடியே புறப்பட்டபோது, ஏவலாளிகளின் வலுவான ஒருவன் அருகேயுள்ள மாட்டுத் தொழுவத்திற்கு சென்று பூவரசு