பதிப்புரை
ஏகலைவன் பதிப்பகத்தின், இரண்டாவது வெளியீடு இந்தச் சிறுகதைத் தொகுப்பு. சு.சமுத்திரத்தின் “எனது கதைகளின் கதைகள்”, முதல் வெளியீடாக வந்துள்ளது. எங்கள் பதிப்பகத்திற்கு, ஏகலைவன் பெயரை, எதற்காகச் சூட்டினோம், என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இந்தச் சிறுகதை தொகுப்பில் உள்ள ‘ஏகலைவன்களைத் தேடி’ என்ற சிறுகதை, இந்தப் பெயருக்கு, தக்கதோர் விளக்கமளிக்கும்.
இந்த ஏகலைவன் பதிப்பகம், தமிழ் இலக்கிய உலகிற்கு, இப்போது தேவைப்படுகிறது. அடித்தள மக்களைப் பற்றி எழுதிய விந்தன் போன்ற மகோன்னத எழுத்தாளர்கள், மேட்டுக் குடியினரால் ஏகலைவன்களாக ஆக்கப்பட்டார்கள். இவர்களுக்குப் பதிலாக, மேட்டுக்குடி மக்களின் ரசனைக்கேற்ப, அடித்தள மக்களின் முதுகில் சவாரி செய்யும், “அர்ச்சுன எழுத்தாளர்கள்” போற்றப்படுகிறார்கள். விந்தனுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை, சு.சமுத்திரம் போன்ற எழுத்தாளர்களுக்கும் வர இருந்தது. ஆனால், தமிழகத்தில் எண்ணில்லா இலக்கிய ஏகலைவன்களின் பெருவிரல்கள் முஷ்டிகளாகி விட்டதால், சு.சமுத்திரம் போன்றவர்களின் பெருவிரல்கள் பிழைத்துக் கொண்டன. நமது முன்னோன் ஏகலைவனுக்கு ஏற்பட்ட கொடுமையைக் கண்டு சீறிப் பாயும் ஆவேசமாக, இந்தப் பதிப்பகம் உருவாகியிருக்கிறது.
ஏகலைவன் பதிப்பகம் உருவாவதற்கு, இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. தமிழ் மக்களின் இன்றைய அடிமைத் தனத்தை. அவர்களுக்கு சொல்லிக் காட்ட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அன்றைய ஏகலைவன், தனது கட்டை விரலை மட்டுந்தான் கொடுத்தான். ஆனால், இன்றைய தமிழ் ஏகலைவன்களோ, அரசியல்—திரைப்பட கயவாளிகளின் கால்களுக்குள் தலைகளைக் கொடுத்து, குப்புறக் கிடக்கிறார்கள். இவர்களை எழுத்து மூலம், தட்டி எழுப்ப, போராளியாய் புறப்பட்டுள்ளது இந்தப் பதிப்பகம். அடிமைத் தமிழனின் இன்றைய நிகழ்கால வரலாற்று பதிவேடாக, இந்தச் சிறுகதைத் தொகுப்பை வெளியிடுகிறோம். 1974 ம் ஆண்டில் தாமரையில், சு.சமுத்திரம் எழுதிய ‘ஐம்பெரும் விழா’ சிறுகதைக்கும், அண்மையில் தமிழன் எக்ஸ்பிரஸில் எழுதிய ‘ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்’ என்ற சிறுகதைக்கும் இடைப்பட்ட காலத்தில், தமிழன் மேலும், தேய்ந்து கொண்டுதான்