உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாடா மல்லி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 135


பூவம்மா மீதும் ஒரு நம்பிக்கையில்லை. ஆனாலும் நன்மை வராது போனாலும் தீமை வராது என்ற அனுமானம். மரகதம், ஒரு தூக்குப் பையில், புடவை ஜாக்கெட், பாடி, பாவாடை வகையறாக்களை நிரப்பி, அவற்றிற்குமேல் வளையல்களைத் திணித்து, தம்பியிடம் நீட்டினாள். பிளஸ்-ஒன் மோகனா என்னம்மா இதெல்லாம் என்று அம்மா தோளில் முகம் போட்டுச் சிணுங்கினாள். அவளோ, முற்றத்தில் எல்லாவற்றையும் மேற்பார்த்த பூவம்மா மயினியிடம் ஒரு சந்தேகம் கேட்டாள்.

“மயினி. இந்த மாதிரி சேலத் துணிகள படைச்சிட்டு நாமளேதான உடுக்கிறது வழக்கம்.”

“தேவதைகளுக்கு நேருற துணிமணிகளை நாம எடுத்து உடுத்தலாம். ஆனால் இது பேய்க்கு வைக்கிறது. தீட்டுக் கழிக்கறது மாதிரி...”

“கூட யாரையாவது அனுப்பலாமா..இவன் அங்கயும் வீட்ல போட்ட கூத்து மாதிரி...”

“கவலையே வேண்டாம். சீதாலட்சுமி வெலகிட்டாள். ஆனாலும் சட்டம் பேசுற பய மவள், கூட யாராவது போனால், அந்த ஆளைப் பிடிச்சுக்கிட்டு, திருப்பிக் கேட்டால், சுயம்ப விட்டுப் போன்னுதானே வாக்குக் கேட்டிய. அப்படின்னு சொல்லிடுவா. அதனால, என் மருமவன் தானாப் போயிட்டு தானா வரட்டும். வாங்கய்யா மருமவனே.”

சுயம்பு, சொல்லப் பொறுக்காமல், அத்தை அருகே போனான். பூவம்மா இடுப்பிலிருந்து விபூதிப் பையை எடுத்து அவனுக்குத் திருநீறு இட்டாள். இன்னொரு இடுப்பில் இருந்த குங்குமச் சிமிழை எடுத்தபோது, “சரியா நெற்றிப் பொட்டுல வையுங்க அத்தை” என்று சுயம்புவே சொல்லிக் கொடுத்தான். பிள்ளையார் திட்டப்போன வாயைக் கட்டிப் போட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/157&oldid=1249613" இலிருந்து மீள்விக்கப்பட்டது