உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாடா மல்லி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சு. சமுத்திரம்


அதைப் பின்புறமாய்க் கொண்டு வந்தான். பிறகு அதைத் தொப்பென்று போட்டுவிட்டு, ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தான். வாயிலும் தலையிலும் மாறி மாறி கைகளால் அடித்துக்கொண்டான். அடித்த களைப்பிலும், அடிபட்ட களைப்பிலும், சிறிது நிதானப்பட்டான். மீண்டும் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, நான்கு திக்கையும் பதினாறு கோணங்களாகப் பார்த்தான். எங்கேயாவது ஒடிப்போகலாமா? எப்படிப் போக முடியும்? பஸ்ஸில் கிடைத்தது மாதிரித்தான் உதை கிடைக்கும். லாரியிலிருந்து பெட்டியைத் துக்கிப் போட்டது போலத்தான் துக்கிப் போடுவார்கள். ‘அய்யோ... ஏன்தான் பிறந்தேனோ? எப்படித்தான் இப்படி ஆனேனோ?

திடீரென்று அவனுள் ஒரு அசுர வேகம், அவன் நிலைக்கு அவன் காரணமில்லை என்ற கண்டுபிடிப்பு. அதற்குக் காரணமானவர்களைக் காண வேண்டுமென்று ஆவேசம். அக்காவின் கழுத்தைக் கட்டி ஆறுதல் பட வேண்டுமென்ற ஆசை. எந்த வீட்டில் பிறந்தானோ, அந்த வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டுமென்ற வைராக்கியம். -

சுயம்பு, மூர்க்கத்தனமாக நடந்தான். அந்த நடையில் பெட்டிச் சுமை பெரிதாகத் தெரியவில்லை. அந்தத் தார்ச் சாலையில் நடுப்பக்கமாகவே நடந்தான். ஓடினான். ஒடி ஒடி நடந்தான். நேரம் நீண்டாலும், அவன் உட்காரவில்லை. கால்களை நத்தை வேகத்திலாவது நகர்த்திக் கொண்டிருந்தான். அவன் வாய்மூச்சு காற்றோடு காற்றாய் கலந்தது. அவன், அவ்வப்போது போட்ட கூச்சல் நரிகளின் ஊளையோடு ஒரு ஊளையாகியது. செருப்பைத் தேய வைத்து, அதன்மேல் கால் தேய நடந்தான். காலதூர கனபரிமாணங்களைக் கடந்தவன்போல், நடப்பதற்காகவே நடப்பதுபோல், நடந்தான். துஷ்டனைக் கண்டால் தூர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/40&oldid=1248867" இலிருந்து மீள்விக்கப்பட்டது