பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'இப்பொழுதும், பின்னாலும், நாம் நம் சமய வாழ்விலும், அரசியல் வாழ்விலும் பல புதிய மாறுதல்கள் செய்ய வேண்டியிருக்கின்றன. ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் நம் திபேத்திய மக்களுக்குப் பல இன்னல்கள் நேர்ந்துள்ளன. நமக்குச் சொந்த வலிமையில்லை, அரசியல் அனுபவமும் இல்லை. எந்த வகையிலும் நாம் முன்னேற்றமடைய வழியில்லை. இதனால்தான் திபேத்தைச் சீர்திருத்தி அமைக்கச் சீனக் கம்யூனிஸ்டுகள் தங்கள் ஆட்களை அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் சீனக் கம்யூனிஸ்டுகள் நம்மை அடக்குவதற்கோ, நம் யஜமானர்களாவதற்கோ, நம்மைக் கொடுமைப்படுத்தவோ வரவில்லை என்பதற்கு நமக்கு உறுதி கூற வேண்டும்.

‘அவர்கள் நமக்கு உதவியாக வந்திருந்தால், திபேத்திய மக்களுக்குச் சொந்தமாயுள்ள அமைப்பு, கலைப்பண்பு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை மதித்து நடக்க வேண்டியது முதன்மையான அவசியம். எல்லா மக்களுடைய நோக்கங்களையும் கெளரவிக்க வேண்டும். நம் தேசத்தாரின் உயரிய தத்துவங்களுக்குத் தடையில்லாமலும், கேடு நேராமலும் நடந்துவர வேண்டும். திபேத்துக்கு வந்துள்ள சீனக் கம்யூனிஸ்டுகள் இங்குள்ள நிலைமைகளைப் புரிந்துகொள்ளாமல் நடந்தோ, நம் மக்களுக்குத் தீங்கிழைத்தோ வந்தால், நீங்கள் அவைபற்றி உடனே அரசாங்கத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.

‘ஒரு குடும்பத்திலுள்ளவர்கள் ஒவ்வொருவரும் தம்மைத் தாமே கட்டுப்படுத்திக் கொண்டு குடும்பக் காரியங்களே நிறைவேற்றி வந்தால், அந்தக் குடும்பம் பிறர் தயவை எதிர்பாராத சுதந்தரமான குடும்பமாகும். குடும்பத்தைப் போன்றதே தேசம்.

‘திபேத்திலுள்ள காம், த்ஸாங், யூ, ஆம்தோ ஆகிய பிரதேசங்களிலுள்ள எல்லா மக்களும் திபேத்தியர்களே. நீங்கள் அனைவரும் பிரிவினையின்றி ஒற்றுமையாயிருக்க வேண்டும்.

228