பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 ⚫ போதி மாதவன்

செய்துகொண்டார். வேதியர்களும் ஓமகுண்டத்தீயை அவித்துவிட்டு வேள்வியை நிறுத்திக் கொண்டனர்.[1]

‘ஆண்டால் தரணியை ஆள்வார், இல்லையெனில் அகில உலகுக்கும் ஞானகுருவாக விளங்குவார்!’ என்று ஆதியில் வேதியர்கள் சாக்கிய மன்னர்க்குக் கூறிய சாக்கிய இளவரசரே தவக்கோலத்தில் அங்கு எழுந்தருளியுள்ளார் என்பதை அதிகாரிகள் மூலம் அறிந்துகொண்டதும், இந்திரன் பிரமனை வணங்கச் செல்வதுபோலப் பிம்பி சாரர் அவர் அண்டையில் சென்றார். உடல் நலம் பற்றி விசாரித்தார். கௌதமரும், இனிய முகத்துடன், தம் உள்ளமும் உடலும் செம்மையுற்றிருப்பதாக மறுமொழி கூறினார். பின்னர் மன்னர் அவருக்குச் செய்யவேண்டிய உபசாரங்களை யெல்லாம் முறை தவறாமல் செய்து, அவரைத் தம்மோடு இருக்கும்படி வேண்டினார். ஆனால் கௌதம பிக்கு, தாம் வந்த காரியம் முடிந்ததென்று


  1. இந்த வேள்வியைப் பற்றியோ, கௌதமர் வந்து தடை செய்தது பற்றியோ அசுவகோஷர் முதலியோர் கூறியுள்ள வரலாறுகளில் செய்தி யொன்றுமில்லை. மலையடிவாரத்திலே கௌதமர் பிச்சைச் சோற்றை உண்டு கொண்டிருப்பதையும், ஒரு குகையில் வாழ்வதையும் ஒற்றர் மூலம் கேள்வியுற்ற பிம்பிசாரர், அங்கே சென்று அவரை வணங்கி வரவேற்றதை அவ்வரலாறுகள் கூறுகின்றன. மன்னருக்கும் கௌ தமருக்கும் நிகழ்ந்த நீண்ட சம்பாஷணையில், பிம்பிசாரர் யாகத்தின் பெரு மைகளைக் கூறும்போது, கௌதமர் ஊனுடை வேள்வியை வன்மையாகக் கண்டித்துக் கூறியிருக்கிறார். இங்கே குறித்துள்ள வரலாறு எட்வின் ஆர்னால்ட் எழுதிய ‘ஆசிய ஜோதி-Light of Asia’ என்ற நூலில் உள்ளது.