பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

153


இப்படியே இன்னும் என்னென்னவோ சிந்தித்துக் கொண்டே கட்டிலில் உட்கார்ந்துகொண்டிருந்த தளபதி வல்லாளதேவன் பொழுது விடிவதற்குள் ஏதோ ஒரு முடிவான தீர்மானத்துக்கு வந்தவனாகச் சட்டென்று எழுந்திருந்தான்.

எவ்வளவு முக்கியமான காரியங்கள் குறுக்கிட்டாலும் தம்முடைய தினசரி வழக்கங்களைக் குன்றாமல் கடைப்பிடிப்பவர் இடையாற்று மங்கலம் நம்பி. புலரிப்பொழுதாகிய வைகறையின் பனிக்காற்று நீங்குவதற்கு முன்பே எழுந்து போய்ப் பறளியாற்றில் நீராடிவிடுவார். ஈர ஆடையைக் களையாமல் நந்தவனத்துக்குச் சென்று தம் கையாலேயே மலர்களைக் கொய்துகொண்டு வருவார். கிழக்கே கதிரவனின் செங்கிரணங்கள் பொன் வண்ணக்கோலமிடத் தொடங்கும் நேரத்தில்தான் அவர் பூஜையை முடித்துக் கொண்டு மாளிகையிலுள்ள சிவன் கோவிலிலிருந்து வெளிவருவார். அப்போது அவரைப் பார்த்தால் கோவில் வாயிலில் ஒளி மயமான மற்றொரு சூரியன் உதித்து நடந்து வருவது போலிருக்கும். சிவந்த கம்பீரமான நெடிதுயர்ந்த மேனியில் வெள்ளிக் கம்பிகள் பதித்தாற்போலத் திருநீற்றுக் கீற்றுக்களும் வெண்ணிற ஆடையும் விளங்க அவிழ்த்து முடித்த ஈரத் தலையோடு அவர் நடந்து வருவது அற்புதமான காட்சியாக இருக்கும். எவ்வளவு தலைபோகிற கர்ரியமானாலும் இந்த அன்றாட அனுட்டானங்களில் குறைவே ஏற்படாது, மாறுதலும் நிகழாது.

அன்றைக்கு மகாசபைக் கூட்டத்துக்காகப் புறத்தாய நாட்டுக் கோட்டைக்குப் போகவேண்டுமென்ற நினைவு இருந்ததனால் வழக்கத்தைக் காட்டிலும் முன்னதாகவே எழுந்து விட்டார் இடையாற்று மங்கலம் நம்பி. அவர் தம்முடைய நித்திய கர்மானுட்டானங்களை முடித்துக் கொண்டு வெளிவந்தபோது, நாராயணன் சேந்தன் விருந்து மண்டபத்திலிருந்து பரபரப்பாக ஓடி வந்தான்.

“என்ன சேந்தா? இப்போதுதான் திருப்பள்ளி எழுச்சி ஆயிற்றா! தளபதி வல்லாளதேவன் இன்னுமா உறங்கிக்