பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

பாண்டிமாதேவி / முதல் பாகம்


எழுத்தாணியையும் மட்டும் கைப்பற்றிக் கொண்டார்கள் என்று தானே சொல்லுகிறாய்?”

“ஆமாம்! அப்போது நான் கூச்சலிட முயன்றேன். அவர்கள் என் வாயில் துணியைத் திணித்துத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டார்கள். நான் மூர்ச்சையடைந்துவிட்டதால் அதற்குப்பின் நடந்ததொன்றும் தெரியாது. இப்போது தான் தெளிவடைந்து இங்கே உங்களை என் கண்முன்னால் காண்கிறேன்” என்றாள் கோதை.

“அப்படியானால் அந்த ஆட்கள் உன்னை அநாவசியமாக இவ்வளவு தூரம் தூக்கி வந்து இந்த மரத்தில் ஏன் கட்டிப் போட்டிருந்தார்கள்?”

“அதுதான் எனக்கும் விளங்கவில்லை ! ஒலைகளையும், எழுத்தாணியையும் திருடுவதற்காகக் கூடச் சில ஆட்கள் கிளம்பியிருக்கிறார்கள் போலிருக்கிறது. ஆனால் வேறோரு சந்தேகமும் உண்டாகிறது!” என்று கோதை சொல்லவும், “என்ன சந்தேகம்? சொல்லேன்” என்றான் அண்டராதித்தன்.

“விளக்கை வாயால் ஊதி அணைத்துவிட்டார்கள். அதனால் அந்தத் தடியர்களை இருட்டில் என்னால் அடையாளம் கண்டுகொள்ளமுடியவில்லை. ஒரு வேளை அன்றொரு நாள் இரவு சத்திரத்துக் கதவை அடைக்கிற நேரத்துக்கு வந்து வம்பு செய்தார்களே, அவர்களாக இருக்கலாமோ?”

“இருந்தாலும் இருக்கும். நீ செய்ததும் வம்புதானே? கதவை அடைத்து, ‘இடங்கொடுக்க மாட்டோம் என்று சொன்னது சரி, அதோடு போகாமல் மேலே நின்று கொண்டு சாணத்தை வேறு கரைத்துக் கொட்டினாய். எல்லாம் உன்னால் வருகிற வினைதான். உன் துடுக்குத்தனத்தால் எனக்கு இல்லாத வம்பையெல்லாம் விலைக்கு வாங்கி வைக்கிறாய்.”

“சரி! நீங்கள் எப்படி இவ்வளவு கணக்காக இந்த இடத்துக்குத் தேடி வந்தீர்கள்?” என்று கேட்டாள் கோதை, நடந்ததையெல்லாம் அவளுக்கு விவரித்துக் கூறினான்.