பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

பாண்டிமாதேவி / முதல் பாகம்



என்பதற்குரிய வேறு சில சங்கேதமான நிகழ்ச்சிகளை நமது வட எல்லைப் பிரதேசங்களில் அடிக்கடி காணமுடிகிறது; கீழைப்பழுவூர்ச் சிற்றரசன் பழுவேட்டரையன் கண்டன் அமுதனும், சோழமண்டலத்துப் பாம்புணிக் கூற்றத்து அரசூருடையான் தீரன் சென்னிப் பேரரையனும், கொடும்பாளூர் மன்னனும், பரதூருடை யானும், இப்படையெடுப்பில் பராந்தக சோழனுக்கு உறுதுணையாயிருப்பார்களென்று தெரிகிறது. தென்பாண்டி மண்டலத்தின் வட எல்லைக் காவல் பொறுப்பு அடியேனிடம் ஒப்புவிக்கப்பட்டிருப்பதால் இந்தச் செய்தியை உடனே தங்களுக்கும், மகாராணி வானவன்மாதேவியாருக்கும் அறிவித்து விடவேண்டுமென்று இத்திருமுகம் எழுதலானேன்.”

“கட்டளைப்படி இத் திருமுகம் கொண்டுவருவான் மானகவசனென்னும் உத்தமதேவன் பால் மறுமொழியும் படையெடுப்பைச் சமாளிக்கும் ஏற்பாட்டு விவரங்களும் காலந்தாழ்த்தாது அறிவித்து அனுப்புக.

“இங்ஙனம் தென்பாண்டி மண்டலப் பேரரசுக்கு அடங்கிய, குறுநிலவேள்". பெரும்பெயர்ச்சாத்தனின் திருமுகத்தைப் படித்து முடித்ததும் இடையாற்று மங்கலம் நம்பி மிகப் பெரிய அதிர்ச்சிக்குள்ளானார். இவ்வளவு சீக்கிரமாக இந்தப் படையெடுப்பு நேருமென்று கனவிற்கூட எதிர்பார்க்கவில்லை அவர். உடனே தளபதியையும் கரவந்தபுரத்துத் தூதனையும் அழைத்துக்கொண்டு மகாராணியாரைச் சந்திப்பதற்காக அந்தப்புரத்துக்குச் சென்றார் அவர். செய்தியை மகாராணியாரிடம் படித்துக் காட்டியபோது அவரும் அதிர்ச்சிக்குள்ளானார். “மகாமண்டலேசுவரரே! ஒரே ஒரு வழி தான் எனக்குத் தோன்றுகிறது. அவசரமாக விரைவில் நீங்கள் இராசசிம்மனைத்தேடிக் கொண்டுவந்தால் அவனையே சேர நாட்டுக்குத் தூதனுப்பலாம். அவனே நேரில் போனால் மாமன்மாராகிய சேரர்கள் படை உதவி செய்ய நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள். சேரர் படை உதவி கிடைத்தால் நாம் எதற்கும் அஞ்ச வேண்டாம். இப்போது இதைத் தவிர வேறு ஒரு வழியும் எனக்குத் தோன்றவில்லை. நீங்கள் உடனே இராசசிம்மனைத்