உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

தொல்காப்பியம்-நன்னூல்


முறையே ஒன்று முதலிய எண்களும் ஆயிரமும் வந்து புனரின், குற்றியலுகரங்கெட, நின்ற ஒற்றின்மேல் உயிர்வந்து ஒன்றி முடியுமென்றார். எனவே ஒன்றின முடித்தலென்பதனால் ஏனைக் குற்றியலுகரவீறும் உயிர்முதல் மொழி வந்து புணர்வுழிக் குற்றியலுகரங் கெட்டு, நின்ற வொற்றின்மே உயிர்வந்து ஒன்றி முடியுமென்பது உம் பெறப்பட்டதாகலின் ஈண்டும் அவ்வாறே குற்றியலுகரங்கெட நின்ற தகரவொற்றின்மேல் எகரவுயிர் வந்து ஒன்றி எழுத்தெனப் படுப என முடிந்தது எனச் சிவஞான முனிவர் புணர்ச்சி விதி கூறியுள்ளார்.

   ‘நூறென்கிளவி யொன்றுமுத லொன்பாற் - கீறுசினை யொழிய இனவொற்று மிகுமே” என்னுஞ் சூத்திரம், நூறென்னுங் குற்றுகரவீற்று எண்ணுப் பெயர் முன் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்ணுப் பெயர்கள் வந்து புணரின் நிலை மொழி யீற்றிலுள்ள குற்றுகரமும் அதனால் ஊரப்பட்ட றகர மெய்யும் கெடாது நிற்ப அவ்வொற்றுக்கு இனமாகிய றகரம் மிக்குமுடியும் என்னும் விதியைக் கூறுவதாகும். இதன் பொருளை உரை யாசிரியர் இனிது விளக்கியுள்ளார். இச்சூத்திரத்தில் ஈறுசினை யொழிய எனவருந் தொடருக்கு ஈற்றிலுள்ள சினையாகிய குற்றியலுகரங்கெட’ எனப் பொருள் கொள்வர் சிவஞான முனிவர். அங்ஙனங் கூறின், நூற்றுமூன்று நூற்றுநான்கு என ஈற்றுக் குற்றியலுகரம் கெடாது நிற்பன இச்சூத்திரத்துள் அடங்காவாம். இச்சூத்திரத்து ஒன்றுமுதல் ஒன்பாற்கு என ஆசிரியர் வரையறுத்துக்கூறிய வருமொழிகளுள் மூன்றும் நான்கும் அடங்குமாதலின் அவை வருமிடத்தும் நூறு என்பதன் ஈற்றுக் குற்றியலுகரம் கெடுதல் வேண்டும். அங்ஙனம் கெடாமையின் இச்சூத்திரத்திற்குச் சிவஞான முனிவர் கூறும் பொருள் தொல்காப்பியனார் கருத்துக்கு முரணாதல் தெளியப் படும். ஆகவே இச்சூத்திரத்தில் ஈறுசினையொழிய என்னுந் தொடரிலுள்ள ஒழிய என்னுஞ் சொல்லுக்கு, அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே முதனிலை யொழிய முன்னவை கெடுதலும் (புள்ளிமயங்கியல்-20) என்புழிப்போல எஞ்சிநிற்ப எனப்பொருள் கொண்டு, ஈற்றெழுத்தாகிய குற்றியலுகரமும் அதனாலுரரப்பட்ட மெய்யாகிய சினையும் விகாரமன்றி எஞ்சிநிற்ப அவ்விடத்து இனமாகிய றகரவொற்று மிக்குமுடியும் எனப் பொருளுரைப்பதே ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாம் என்க.