இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தொகைமரபு 143
= பொன்னகல் எனக் குறியதன் முன்னர் ஒற்றுத் தன்னுருபு இரட்டின.
அடுத்த சூத்திரத்து (6) ஆறனுருபு முற்கூறிய வதனான் ஒற்றிரட்டுதல் உயிர் முதன்மொழிக் கண்ணதென்பர் உரையாசிரியர். இக்கருத்தே பற்றி நன்னூலாரும்,
குறிலணை வில்லா னனக்கள் வந்த நகரந் திரிந்துழி நன்னுங் கேடே (நன். 210)
எனவும்,
குறில்செறி யாலள அல்வழி வந்த தகரந் திரிந்தபிற் கேடும் ஈரிடத்தும் வருநத் திரிந்தபின் மாய்வும் வலிவரின் இயல்புந் திரிபும் ஆவன வுளபிற. (நன். 229) எனவும் வரும் இரண்டு சூத்திரங்களால் விளங்க உரைத்தார்.
ஆறன் உருபினும் நான்கன் உருபினுங் கூறிய குற்றொற் றிரட்ட லில்லை ஈறாகு புள்ளி அகரமொடு நிலையும் நெடுமுதல் குறுகும் மொழிமுன் னான. (தொல்,16) இஃது உருபியலை நோக்கியதோர் நிலைமொழிக்கருவி கூறுகின்றது. (இ~ள்) நெடிதாகிய முதலெழுத்துக் குறுகிமுடியும் அறு வகைப்பட்ட மொழிகளின் முன்னர் வந்த ஆறாம் வேற்றுமை யுருபினும் நான்காம் வேற்றுமை உருபினும் முன் நிலைமொழிக் கண் இரட்டி வருமென்ற குற்றெழுத்து இரட்டுதலில்லை; நிலை மொழி யிற்றுக்கண் நின்ற ஒற்றுக்கள் அகரம் பெற்று நிற்கும் என்பதாம்.
அறுவகைப்பட்ட மொழிகளாவன தாம் நாம், யாம், தான், யான், நீ என்பன. இவை குவ்வும் அதுவும் ஆகிய உருபேற்குங் கால் முறையே தம், நம், எம், தன், என், நின் என நெடுமுதல் குறுகி அகரம் பெற்று நிற்பன.
(உ-ம்) தமது, நமது, எமது, தனது, எனது, நினது, தமக்கு, நமக்கு, எமக்கு, தனக்கு, எனக்கு, நினக்கு எனவரும்.
‘குவ்வின் அவ்வரும் நான்காறு இரட்டல (247) என்பது நன்னூல்.
நும்மெ னிறுதியும் அந்நிலை திரியாது. (தொல்.162)
இதுவும் அது.