உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18/ வயலூர் சண்முகம்


பக்கத்தில் நின்ற ஹோட்டல் பையன்
சொக்கு என்பவன், “தூக்கமா சாரு?
கொக்கு சாரு கோபிக் கிறாரே!
அக்கவுண்ட் குளோசாம்! எழுந்திரு!" என்றான்

முத்துவின் தூக்கம் துக்கமாய் ஆச்சு!
பத்திர மாகப் படுக்கை அடியில்
வைத்தி ருந்த பணத்தைக் காணோம்!
கத்தினால் அதனால் கலாட்டா ஆகுமே!

பணத்துடன் ‘கம்பி நீட்டி’ விட்டக்
'குணாளன்' பஞ்சுவை மனதிலே திட்டினான்!
துணையும் இல்லை! துட்டும் இல்லை!!
கணைகள் பட்ட மானாய்த் துடித்தான்!

‘கொக்கு சாரென’ப் பையன் குறித்த
சக்கர வர்த்தி - விடுதி நிர்வாகி
துக்கத் தினாலே குமுறும் முத்துவை
அக்கறை யாக விசாரிக்க லானார்!

"திருட்டு விஷயம் வெளியே தெரிந்தால்
விரட்டும் போலீஸ் உன்னை!அதனால்
சரட்டு புரட்டென எங்கேனும் ஓடிடு!”
மிரட்டி முத்துவை வெளியே துரத்தினார்!