பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குதூகலமாகப் படிக்க...

சிறுவர்களுக்கு எழுதுவது ஒரு தவம். அவர்களின் மனோநிலை, வார்த்தைகள், கபடறியா சிந்தனை என்பனவற்றை உள்வாங்கி அவர்களின் அபிமானத்தைப் பெறுவதென்பது இலகுவில் ஆகக்கூடிய காரியமல்ல.

தமிழில் சிறுவர் இலக்கியம் வறுமை கொண்டது. வறுமை ஒழியவேண்டும். குழந்தை இலக்கியம் நிறையவே உருவாக வேண்டும்,

பிறமொழிகளில் பேர்பெற்ற எழுத்தாளர்களெல்லாம் குழந்தைகளுக்கு எழுதுவதில் ஆர்வம் காட்டியவர்கள். இவ்வழியில் திரு. கே.பி. நீலமணியும் உள்ளார்.

‘புல்லின் இதழ்கள்’ போன்ற பெரியவருக்கான நூலை எழுதிய இவர் சிந்தனையூட்டும் நல்ல நூல்களின் ஆசிரியர். குழந்தைகளுக்கும் நிறைய எழுதியிருப்பவர் இவர்.

இவரது குழந்தை நூல்களுக்காக, தங்கம், வெள்ளி பதக்கங்களையும், தமிழக அரசின் பரிசு, இலக்கியச் சிந்தனை பரிசு ஆகியவற்றையும் பெற்றவர். இவரது இந்த நாவல், தினமலர் சிறுவர் மலரில் வெளியாகி எண்ணற்ற குழந்தைகளை மகிழ்வித்துள்ளது.

விறுவிறுப்பான இந்த சிறுவர் நாவல், இவர்க்கெல்லாம் நல்ல விருந்து. சிறுவர்கள் குதூகலத்தோடு இதைப்படித்து மகிழ்வார்கள். ஆசிரியரை இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்.

சென்னை

செ. யோகநாதன்