பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

பதிமூன்றாம் அத்தியாயம்

கையிலே விலங்கு பூட்டி, சங்கிலியால் பிணைத்து, தெரு வழியே இழுத்துச் சென்றார்கள்.

இப்பொழுது இந்தியாவிலேயே சமஸ்தானம் என்பதே இல்லை. அவற்றை எல்லாம் ஒழித்துக்கட்டி விட்டோம். ஆனால் பிரிட்டிஷார் ஆண்ட போது அப்படி இல்லை. சுமார் 560 சமஸ்தானங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று நாபா. பஞ்சாபில் இருந்தது இது.

பஞ்சாபிலே இருந்த சீக்கிய சமஸ்தானங்கள் இரண்டு. ஒன்று பாடியாலா, மற்றொன்று நாபா. நாபா மன்னருக்கும் பாடியாலா மன்னருக்கும் சண்டை. நாபா மன்னரை பதவியில் இருந்து விரட்டி விட்டது வெள்ளையர் அரசாங்கம். நாபா சமஸ்தானத்தின் பொறுப்பு வெள்ளை அதிகாரி ஒருவரிடம் ஒப்புவிக்கப்பட்டது.

அகாலியர் சீக்கியருள் ஒரு வகுப்பினர்; வீர மரபினர்; இராணுவத்திலே சேவை செய்து திரும்பியவர்கள். நாபா மன்னருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டனர். சீறி எழுந்தனர். மன்னரை மீண்டும் பதவியில் அமர்த்தவேண்டும் என்று கிளர்ச்சி செய்தார்கள்.

நாபாவிலும் கிளர்ச்சி நடந்தது. மற்றெல்லா இடங்களிலும் கிளர்ச்சி, கிளர்ச்சி, கிளர்ச்சி ! இந்த கிளர்ச்சிக்கு எரியூட்டுவது போல அமைந்தது மற்றொரு நிகழ்ச்சி.