பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

வேங்கடம் முதல் குமரி வரை

காலடியிலேயே இருக்கிறார்கள். இந்த திருவிக்கிரமனை வணங்கிய பின் கோயிலைச் சுற்றலாம்.

கோயிலின் முதல் பிராகாரத்தின் முகப்பிலே துர்க்காம்பாள். விக்கிரமன் ஆணையின் பேரில், கோவிலுக்கு அவள் காவல் நிற்பதாகக் கூறுவர். துர்க்கை சிலை அநேகமாக விஷ்ணு கோயில்களிலே காண்பது இல்லை. இந்தப் பிராகாரத்திலேயே லக்ஷ்மிநாராயணன், லக்ஷ்மிவராஹன், லக்ஷ்மி நரசிம்மன் மூவருக்கும் தனித்தனி சந்நிதி. இன்னும் ராமர், உடையவர், திருக்கச்சி நம்பி, ஆண்டாள், மணவாள மாமுனிகளின் சந்நிதிகளும் தனித் தனியே இருக்கின்றன. இரண்டாவது பிராகாரம் கல்யாண மண்டபம் எல்லாம் கடந்து சென்றால் புஷ்ப வல்லித் தாயாரைக் கண்டு சேவிக்கலாம். கோயில் பிரும்மாண்டமான கோயில், கட்டட நிர்மாணத்தைக் கவனித்தால் நாயக்க மன்னர்களே கோயிலின் பெரும் பகுதியைக் கட்டியிருக்க வேண்டும். அதற்கேற்றாற் போல் நாயக்க மன்னர்கள் சிலையும் அங்கே நிறைய இருக்கின்றன. பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரோடும் திருமங்கை மன்னனும் இந்தத் தலத்தை மங்களா சாஸனம் செய்திருக்கிறார். 'தீங்கரும்பும் கண் வளரும், கழனி சூழ்ந்த திருக்கோவலூர் அதனுள் அடியவர்களுக்கு ஆரமுதம் ஆனான் தன்னைக் கண்டேன் யானே' என்று பெருமிதத்தோடு பாடுகிறார் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார்.

இவ்வளவு தூரம் வந்த நாம், இன்னும் கொஞ்சம் காலை எட்டிப்போட்டு மேற்கே பத்துமைல் போய் இதே பெண்ணையாற்றங்கரையிலே உலகளந்த அலுப்புத் தீரக் காலை நீட்டி நிமிர்ந்து படுத்து கிடக்கும் திருவரங்கத் தானையுமே பார்த்து விடலாம். 'எல்லோரும் தொழ நின்ற திருவரங்கம்' அந்த பொன்னியாற்றிலே உள்ள தீவிலே இருக்கிறது என்றுதானே அறிவோம். இல்லை, இந்தப் பெண்ணையாற்றங் கரையிலுமே ஒரு திருவரங்கம்.